பதிவு செய்த நாள்
08
டிச
2014
12:12
திருப்பூர் : ""பணிவு, பக்தி உள்ளவர்களை நாடி, கடவுள் வருவார், என, ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசினார். திருப்பூர் ஐயப்பன் கோவிலில், 55வது ஆண்டு மண்டல பூஜை விழாவையொட்டி, "மகாபாரத கதாபாத்திரங்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. நாகை முகுந்தன் பேசியதாவது:குழந்தைகளுக்கு கடவுள் பெயரை சூட்டுங்கள். அதன் மூலம் கடவுள் பெயரை அழைப்பதால், புண்ணியம் கிடைக்கும். இறைவன் பெயரை உச்சரித்தால், நிச்சயம் முக்தி கிடைக்கும். மகாபாரதம், நம் வாழ்க்கையோடு தொடர்புடையது. குறிக்கோளை அடைய, கவனம் சிதறக்கூடாது என்பதை மகாபாரதம், வில்லுக்கு சிறந்தவன் அர்ச்சுணன் என்பதன் மூலம் நமக்கு உணர்த்துகிறது. வில்லில் அர்ச்சுணனை தவிர சிறந்தவர் யாருமில்லை என்றபோது, "நான் இருக்கிறேன் என, எழுந்தான் கர்ணன். அவனை, "தேரோட்டியின் மகன்
கர்ணன், அர்ச்சுணனுக்கு போட்டியா? என இழிவுபடுத்தியபோது, சொல் அம்பால் காயம்பட்ட கர்ணன் தலைகுனிகிறான். அவனை ஆறுதல்படுத்திய துரியோதனன், "வீரத்தோடு வீரம் மோதுவதற்கு சாதி தேவையில்லை, என்கிறான். கற்றவருக்கு, தானத்தில் சிறந்தவருக்கு, அரசர்களுக்கு, வீரர்களுக்கு உயர்வு தாழ்வு எதிலும் இல்லை என சாஸ்திரம் சொல்வதாக கூறுகிறான். கர்ணனை, அங்கதேசத்துக்கு மன்னனாக அறிவிக்கிறான். மகுடம் சூட்டி தனது ஆசனத்தில் அமர வைக்கிறான். மனம் நெகிழ்ந்த கர்ணன், "செஞ்சோற்று கடன் தீர்க்க, நான் துரியோதனுக்காக உயிரையும் துறப்பேன், என, உறுதிமொழி எடுக்கிறான்.வீடு தேடி வரும் கண்ணனை பலரும், "என் வீட்டுக்கு வா, என் வீட்டுக்கு வா, என அழைக்க, அவர்கள் வீட்டுக்குள் செல்லாத கண்ணன், "வீட்டுக்கு வா, என அழைத்த விதுரன் வீட்டுக்குள் செல்கிறார். ஆணவம் உள்ளவர்களிடம் கடவுள் வருவதில்லை. மேட்டில் இருந்து பள்ளம் நோக்கி வரும் வெள்ளம் போல் பணிவு, பக்தி உள்ளவர்களை நாடியே கடவுள் வருகிறார்.இவ்வாறு, அவர் பேசினார். வித்தகன் விருது : தர்ம சாஸ்தா டிரஸ்ட் மற்றும் ஐயப்பன் பக்த ஜன சங்கம் சார்பில், நாகை முகுந்தனுக்கு "வில்லி பாரத வித்தகன் விருது வழங்கப்பட்டது. தலைவர் ஆறுமுகம், செயலாளர் மணி, முன்னாள் செயலாளர் நாச்சிமுத்து, முன்னாள் துணை செயலாளர் பொன்னுதுரை, "கிளாசிக் போலோ உரிமையாளர் சிவராமன் ஆகியோர், அவ்விருதை வழங்கினர்.