Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருச்சி மகா சுவாமிகள் - தகவல் பலகை
முதல் பக்கம் » மகா சுவாமிகள்
மகா சுவாமிகள், திருச்சி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 டிச
2014
18:13

எங்கோ அவதரிப்பார்கள், வேறெங்கோ போய் சேவை செய்வார்கள். அவதாரம் ஓரிடம்; அருளாட்சி வேறிடம். மகான்களுக்கு இறைவன் அருளிய கொடை இது. ஒவ்வொரு ஞான புருஷரின் சேவையும் எந்தெந்த இடத்துக்கு எந்தெந்தக் காலகட்டத்தில் தேவை என்பதை இறைவன் மட்டும்தானே அறிய முடியும்?! இதற்கு உதாரணமாக எண்ணற்ற மகான்களைச் சொல்லலாம். ஆன்ம ஞானம் தேடிப் பல இடங்களுக்கும் யாத்திரையாகச் செல்லும் இந்த அவதார புருஷர்கள். தங்களுக்குத் தோன்றிய இடத்தில் - இறைவனின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அங்கேயே நிலை கொள்வார்கள். தங்களைத் தேடி வரும் மக்களைப் புனிதப்படுத்தும் பணியில் தங்களை இணைத்துக்கொள்வார்கள். இறை பக்தியை நாளும் பரப்புவார்கள்.

விதை விதைப்பதோடு மனிதனின் வேலை முடிந்தது. அதன் பிறகு, அது வளர்வதெல்லாம் இயற்கையின் கையில். தேவையான வேளைகளில் மழை பொழிய வேண்டும்; வெயில் அடிக்கவேண்டும். இவை எல்லாம் முறை தவறாமல் இருந்தால்தான். அந்த விதை மாபெரும் விருட்சமாக வளர முடியும். இதில், மனித முயற்சி என்பது சிறிது தேவைப்பட்டாலும், இயற்கையின் ஒத்துழைப்பே அதிகம் தேவை. அது இல்லாவிட்டால், மனித முயற்சி எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான்! கண் முன்னே வளரும் செடி துளிர்க்குமா. பட்டுப் போகுமா என்பதையே மனிதனால் கணித்துச் சொல்ல முடியாது. அந்த உயிர் வளர்வதும் அவன் கையில்தான். அதாவது இறைவனின் கருணையில்!  இதை மனதில் கொண்டுதான், தங்கள் வயல்வெளிகளைக் காத்து வரும் கடவுள்களுக்கு நன்றி சொல்லி, அவ்வப்போது கிராம மக்கள் விழா எடுக்கிறார்கள்; பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள்.

அதுபோல் ஜனனம் வரைதான் மனிதர்கள் கைகளில். அதன் பின் அந்தக் குழந்தை எப்படி வளர்ந்து, உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் பெற்றோரது தீர்மானங்கள் நிறைவேறும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இறைவனின் தீர்ப்பே இறுதியானது உறுதியானது. நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தில் - தாமிரபரணிக் கரையில் விக்கிரமசிங்கபுரத்தில் அவதரித்த நம் திருச்சி மகா சுவாமிகள், பெங்களூருவில் ஸ்ரீஞானாட்சி ராஜராஜேஸ்வரிக்குப் பிரமாண்டத் திருக்கோயில் அமைத்து. ஸ்ரீகைலாச ஆஸ்ரம மஹா சமஸ்தானத்தையும்  ஏற்படுத்துவார் என்பதை அவரது சிறு வயதில் யார் அறிவார்? ஊரை விட்டுப் புறப்பட்டு, யாத்திரை யாத்திரையாக தரிசித்து கால் நடையாகப் பயணித்து வந்த இந்த சுவாமிகளுக்கு. இந்த இடத்தில் நீ நிலை கொள் என்கிற குறிப்பை ஏன் ஆண்டவன் தந்தான்?

பெங்களூருக்கே ஓர் அடையாளமாக இருக்கக்கூடிய இந்த ராஜராஜேஸ்வரி திருக்கோயில், இன்று அகிலம் முழுவதும் சிறப்பாகப் பேசப்படுகிறதென்றால், அதற்குக் காரணம் - திருச்சி மகா சுவாமிகள் தான்! அவரது அருள் நிறைந்த வாழ்க்கைதான் இன்று பெங்களூருக்கே பெருமை தேடித் தந்திருக்கிறது என்று சொல்லலாம். அழகு ததும்பும் திருமேனியுடன் தரிசனம் தரும் இந்த ராஜராஜேஸ்வரிக்கு உள்ளூர் பக்தர்களைத் தவிர, வெளியூர் பக்தர்களும் அதிகம். அன்னையின் முகத்தில் தவழும் குறுநகையைக் கண்டு கொண்டாடாதவர்கள் இல்லை. சந்நிதியில் நிற்க ஆரம்பித்தால், நகர்வதற்கே மனம் வராது.

இந்த அன்னையின் கருவறையில் குறிப்பிடத்தகுந்த ஒரு விசேஷம் - இங்கே கண்களைக் கவரும் மின்விளக்குகள் இல்லை. இயற்கையாய் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் தீபச் சுடர் ஒளியில் அன்னை, இன்னும் அழகாக மிளிர்கிறாள். இந்த ஆலய வளாகத்தில்தான் திருச்சி மகா சுவாமிகளின் அதிஷ்டானமும் காணப்படுகிறது. வாருங்கள், இந்த அன்னைக்கு ஆலயம் அமைத்த திருச்சி மகா சுவாமிகளின் சரித்திரத்øத் சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்.  அவதார புருஷரின் இளம் பிராயத்தை தரிசிப்போம். ஆதிநாராயண சுவாமி நாயக்கர்- ரங்கநாயகி அம்மையார் ஆகியோர் கருத்தொருமித்த  தம்பதியர், வசதியான குடும்பத்தில் பிறந்த ஆதிநாராயண சுவாமி, ரவண சமுத்திரத்தில் கிராமப் பொறுப்பாளராக இருந்தார். வைணவத்தில் பற்று அதிகம் இருந்தாலும், தான் இருந்த ஊரில் ஒரு சிவாலயத்தையும் கட்டினார். அந்த ஆலய விழாவின்போது சிருங்கேரி ஆச்சார்யரான ஸ்ரீசந்திரசேகர பாரதி மகா சுவாமிகளை அழைத்தார், பிறகு, அவரைத் தன் இல்லத்துக்கு மரியாதையுடன் அழைத்து வந்த பாத பூஜை செய்து மகானின் அருள் பெற்றார்.

ரவணசமுத்திர வாழ்க்கையில் இந்தத் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து. துரதிர்ஷ்டவசமாகச் சில ஆண்டுகளுக்குள் இறந்து விட்டது. பாசத்துடன் வளர்த்த மகள் இப்படிப் பரிதவிக்கவிட்டுப் போய் விட்டாளே என்கிற கவலையில் சில காலம் வாழ்ந்தனர். பிறகு, கவலைகளை மறக்கும் விதத்தில் பல புண்ணிய தலங்களுக்கும் யாத்திரை புறப்பட்டனர். தங்களின் குலம் தழைக்க ஒரு வாரிசு வேண்டும் என்று எல்லா தெய்வங்களிடமும் கோரிக்கை வைத்தனர். தமிழகத்தின் தென்கோடியில் உள்ள பல ஆலயங்களை தரிசித்துவிட்டு. இறுதியாகக் கன்யாகுமரி வந்தடைந்தனர். கடலோரத்தில் கருணை ஆட்சி நடத்தி வரும் அந்தக் குமரி தெய்வத்தை தரிசித்துவிட்டு, வெளியே வந்தனர். இறை அருள் பெற்ற பூரிப்பு அவர்களை விட்டு அகலும் முன், அந்தத் தாயே அவர்கள் முன் தோன்றி அருள் வாக்குச் சொல்லியிருக்கிறாள் போலிருக்கிறது.

ஆம்! வயதான ஒரு மூதாட்டி அவர்கள் முன் தோன்றினார். அப்பனே.... பழநிக்குப் போய் ஒரு மண்டலம் தங்கி இருந்து பாலமுருகனைக் கும்பிடு. உன் வேண்டுதல் நிறைவேறும் என்று சொன்னார். குமரி அம்மன் சந்நிதியில் குறி சொன்ன மூதாட்டிக்கு நன்றி சொல்லலாம் என்று நிமிர்ந்து பார்த்த ஆதிநாராயண சுவாமி திகைத்தார். மூதாட்டியை அங்கே காணவில்லை. தம்பதியர் சிலிர்த்தனர். இறைவனே நமக்கு நல்லாசி வழங்கி இருக்கிறான் என்றுஆனந்தப்பட்டு, குமரி தெய்வத்துக்கு நன்றி சொல்லிவிட்டுப் பழநியை நோக்கி யாத்திரையைத் துவக்கினர்.

மூதாட்டியின் அருள் வாக்குபடி ஒரு மண்டல காலத்துக்குப் பழநியில் தங்கி இருந்தார்கள். அனுதினமும் மலை ஏறி, ஸ்ரீதண்டாயுதபாணியை வணங்கித் தங்கள் கோரிக்கையை அவனிடம் வைத்தார்கள். ஒரு மண்டல கால வழிபாடு முடிந்து, ஊருக்குத் திரும்பலாம் என்று இருந்த நேரத்தில் அடுத்த ஆச்சரியமும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தது. ஆம்! ரவணசமுத்திரத்தில் எந்த சிருங்கேரி ஆச்சார்யரைத் தங்கள் வீட்டுக்கு அழைத்து பாத பூஜை செய்தார்களோ, அதே ஆச்சார்யர் யாத்திரையாகப் பழநி திருத்தலத்துக்கும் வந்திருந்த செய்தி கிடைத்தது. ஆச்சார்யர் தங்கியிருக்கும் இடத்தை விசாரித்து அறிந்துகொண்டு, அங்கே சென்றனர். சிருங்கேரி ஆச்சார்யர் தரிசனத்தில் மனம் பூரித்தனர். இவர்களை அடையாளம் கண்டுகொண்ட ஆச்சார்யரும் பிரசாதங்களைக் கொடுத்து, கவலைப்படாதீர்கள். உங்களுக்கு விரைவிலேயே ஓர் ஆண் மகன் பிறப்பான் என்று கூறி ஆசிர்வதித்தார். அப்போது தம்பதியர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ரவண சமுத்திரம் வந்தார்கள். தாங்கள் சென்று வந்த ஆலயங்களின் மகத்துவத்தைப் பற்றி தினம்தினம் பேசி நாட்களை சந்தோஷமாகக் கழித்தனர் ஆதிநாராயண சுவாமி - ரங்கநாயகி தம்பதியர். ஒரு நாள் இரவு அந்த அற்புதம் நிகழ்ந்தது. ரங்கநாயகி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு கனவு . இறை ஆயுதமான திரிசூலம் அவரது வயிற்றில் திடீரென இறங்கியதைப் போல ஒரு காட்சி... சிலிர்த்துக்கொண்டு எழுந்தார் ரங்கநாயகி. தன் கணவரை எழுப்பி, அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். அவரால் அதற்கு என்ன விளக்கம் என்று சொல்ல முடியவில்லை. படுத்துத் தூங்கு நாளையே நாம் சிருங்கேரி போய் ஆச்சார்யரிடம் சொல்லி, இதற்கான விளக்கத்தைக்    கேட்கலாம் என்று சொன்னார்.

அடுத்த நாள் இவர்கள் இருவரும் சிருங்கேரியில். நன்கு பரிச்சயம் ஆன ஆச்சார்யா என்பதால், எளிதில் அவரைச் சந்தித்தனர். கனவு விஷயத்தை அவரிடம் சொன்னார்கள். ஒருவித கலவரத்துடன், சிருங்கேரி ஆச்சார்யா புன்னகைத்தார். ஆதிநாராயணா.... எதிர்காலத்தில் சிறந்த ஒரு தவப்புதல்வனை மகனாக அடையப் போகிறீர்கள். அதன் வெளிப்பாடுதான் ரங்கநாயகி கண்ட கனவு. இது கவலைப்படவேண்டிய கனவு அல்ல.... உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவிருக்கும் கனவு என்றார்.

அதன்பின், அங்கிருந்து பழநிக்கும் சென்று முருகப் பெருமானை தரிசித்துவிட்டு மதுரைக்கு வந்தார்கள். ஊர் திரும்பிய பின் தங்களது வசிப்பிடத்தை மாற்றவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. விக்கிரமசிங்கபுரத்துக்குக் குடி பெயர்ந்தார்கள். நம் மகா சுவாமிகளின் அவதாரம் இந்த பூமியில்தான் நிகழவேண்டும் என்று எழுதப்பட்டிருந்தால். அதை எவர் மாற்ற இயலும்? இந்தப் புண்ணிய பூமியில்தான் ரங்கநாயகிக்கு 1929-ஆம் வருடம் மார்ச் மாதம் 29 -ஆம் தேதி புதன்கிழமை ஒரு பூச நட்சத்திர தினத்தில் நம் சுவாமிகள் அவதாரம் செய்தார்.

சாதாரணமாக குழந்தைக்கு அது பிறந்த ஒரு மாத காலத்துக்குள் எப்படியாவது பெயர் சூட்டிவிடுவது வழக்கம். ஆனால், தங்கள் குழந்தைக்கு ஏதும் பெயர் சூட்டவே இல்லை ஆதிநாராயண தம்பதியர். ஆனாலும் ஏதாவது ஒரு பெயரைச் சொல்லிக் குழந்தையைக் கூப்பிட்டாகவேண்டுமே? குடும்பத்தினர் கூடிப் பேசி சுவாமி என்று குழந்தையை அழைக்க ஆரம்பித்தனர். பழநி முருகனின் அருளோடு பிறந்த குழந்தை என்பதால், சுவாமி என்ற பெயருக்கு உடன்பட்டனர் இந்த வைணவக் குடும்பத்தினர்.

ஆனால், பின்னாளில் சுவாமிக்கு பழனிச்சாமி என்கிற நாமகரணம் சூட்டப்பட்டது. அமாவாசை சாமியார் என்கிற திகம்பரரால். அவர் இந்தப் பெயரைச் சொல்லி அழைத்ததற்கும் ஒரு சம்பவம் உண்டு.

ஒரு முறை சுவாமிக்குத் தொடர்ந்து மூன்று மாதங்களாக விடாத காய்ச்சல். ஜுரம் விட்டு விட்டு வந்துகொண்டிருந்தது. அவ்வப்போது குழந்தை தன் நினைவை இழந்துவிடும். பெற்றோர் துடித்துப்போயினர். இருந்திருந்து பெற்ற ஒரு மகனுக்கு இப்படி ஒரு அவஸ்தையா? இறைவனின் ஆசியோடு பிறந்தவன் ஆயிற்றே இவன்? என்றெல்லாம் மனம் கலங்கித் தவித்த ஒரு காலை வேளையில், உடலில் ஒட்டுத் துணியும் இல்லாத - திகம்பரரான- அமாவாசை சாமியார் என்பவர் ஆதிநாராயண சுவாமியின் வீட்டின் உள்ளே திடீரெனப் புகுந்தார். கொஞ்சம் விபூதியை வாங்கி. சுவாமியின் உடல் முழுவதும் பூசிவிட்டு உரத்த குரலில், டேய், பழனிச்சாமி.... பழனிச்சாமி..... எழுந்திருடா என்றார்.

சுய நினைவு இழந்த நிலையில், மரணத்தின் விளிம்பில் இத்தனை நாட்களும் தவித்துக் கிடந்த குழந்தை, பொசுக்கெனக் கண் விழித்துப் பார்த்தது. கைகால்களை அசைத்தது. மெள்ள மெள்ள காய்ச்சலும் குறையத் தொடங்கியது.

பெற்றோர் குதூகலித்தனர். ஊர் ஜனங்கள் அனைவருமே இதை அதிசயம் என்று கொண்டாடத் துவங்கினர்.

அதிலிருந்து பழனிச்சாமி ஆனார். நம் திருச்சி மகா சுவாமிகள்!

நம் சுவாமிகளுக்கு பழனிச்சாமி என்று பெயர் சூட்டி அழைத்த அமாவாசை சாமியார். மகாராஷ்டிரத்தில் இருந்து வந்தவர். தமிழகப் பகுதிகளிலேயே பெரும்பாலும் சுற்றிக் கொண்டிருந்ததால் இவருக்குத் தமிழ் சரளமாக வரும். ஸித்து விளையாட்டுகள் அறிந்தவர். ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று மட்டுமே உணவு உட்கொள்வார். மற்ற தினங்களில் எதையும் சாப்பிட மாட்டார். இதனாலேயே இவர் அமாவாசை சாமியார் என அழைக்கப்பட்டார்.

விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பாடங்களைப் பயின்றார் பழனிச்சாமி. இவரது ஏழு முதல் பத்து வயது வரையிலான மூன்று ஆண்டு காலத்துக்கு ராமசாமி சாஸ்திரி என்கிற வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்தார். கல்வி அறிவைப் புகட்டும் ஆசிரியரான ராமசாமி சாஸ்திரியாருக்கு சேவை செய்து, ஒரு மாணவன் என்கிற நிலையில் என்னென்ன கலைகளைப் பெறவேண்டுமோ, அவை அனைத்தையும் பெற்றார் பழனிச்சாமி என்கிற நம் சுவாமிகள். கணிதம். இலக்கணம் போன்றவை உட்பட ராமயாணம், மகாபாரதம் போன்ற புரணாக் கதைகளையும் ஆசிரியரிடமிருந்து கற்றார்.

சுவாமிகளிடம் ஆன்மிகத் தாக்கத்தை விதைத்ததில் ராமசாமி சாஸ்திரிகளுக்கு எப்படி ஒரு பங்கு இருக்கிறதோ, அதைவிடக் கூடுதலான பங்கு அபுபக்கர் பாட்டிக்கு உண்டு. யார் இந்தப் பாட்டி?

சுவாமிகளின் வீட்டிலேயே அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒத்தாசையாக இருந்து வந்தவர் அபுபக்கர் பாட்டி. இவருக்கு அப்போதே வயது சுமார் 90 இருக்கம். ஒல்லியான தேகம். ஆனால், வயதுக்கும் இவரது சுறுசுறுப்புக்கும் சம்பந்தமே இருக்காது. இந்த குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவராகவே பாட்டி வசித்து வந்தார். பாட்டியின் முக்கியமான வேலைகளுள் ஒன்று வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து உடல் முழுக்க மசாஜ் செய்து, பிறகு சீயக்காய்த் தூள் வைத்துத் தலையையும் உடலையும் நன்றாகத் தேய்க்க வேண்டும். துண்டால் துவட்டி விட்டு,  தலைமுடிக்கு சாம்பிராணி போன்ற வாசனை திரவியங்களைக் காட்டி உலரச் செய்ய வேண்டும். இதைத் தவிர, இரவு வேளைகளில் வீட்டில் எண்ணெய் விளக்குகளை ஏற்றி வைக்கும் பணியையும் அபுபக்கர் பாட்டியே செய்வார். அதோடு சிறந்த ஆன்மிகவாதியாகவும் திகழ்ந்தார் பாட்டி. இந்து, இஸ்லாம் மதக் கோட்பாடுகளை விரல் நுனியில் வைத்திருந்தார். தமிழும் சமஸ்கிருதமும் அத்துப்படி. சில ஸ்லோகங்களை சுவாமிகளிடம் சொல்லி, அதற்கான விளக்கத்தை வெகு அழகாக விவரிப்பார் பாட்டி.

சில வேளைகளில் ஒரு சந்நியாசினியைப் போல் தியானத்தில் அமர்ந்து சமாதி நிலையை எட்டிவிடுவார். அந்த ஊரில் உள்ள அனைவரும் பாட்டியின் மீது ஒரு மரியாதை வைத்திருந்தனர். பாட்டி தெருவில் நடந்து போனாலும். எவராக இருந்தாலும் வழி கொடுத்து ரொம்பவும் மரியாதையாக ஒதுங்கிச் செல்வார்கள்.

ஆன்மிக அறிவிலும் தியானப் பயிற்சியிலும் தேர்ந்திருந்த அபுபக்கர் பாட்டி, சுவாமிகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். சுவாமிகளுக்குப் பதினொரு வயது இருக்கும்போது பாட்டி இறந்துவிட்டிருந்தார். தன் ஞானப் பார்வையால் சுவாமிகள் யார் என்பதை அறிந்திருந்த பாட்டி, இந்தக் குழந்தை சாதாரணமானது அல்ல. வித்தியாசமாக வளரப் போகின்ற குழந்தை. இந்த உலகத்தில் இருக்கின்ற பலருடைய விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காகப் பிறந்திருக்கிறது இந்தக் குழந்தை என்று சுவாமிகளின் பெற்றோர் உட்பட மற்றவர்களுக்கு அவ்வப்போது எடுத்துச் சொல்வார் அபுபக்கர் பாட்டி.

அருள் முத்துக்களாக அபுபக்கர் பாட்டி உதிர்த்த வார்த்தைகளை மெய்ப்பிக்கின்ற விதத்தில்தான் சுவாமிகளின் நடவடிக்கைகள் இருந்தன. ஊரில் இருக்கின்ற அல்லது ஊருக்குப் புதிதாக வருகின்ற சாதுக்களுடன் சுவாமிகளுக்கு எப்படியோ ஒரு நெருக்கம் எற்பட்டது. அவர்களுடன் நெடுநேரம் கழித்தார். பள்ளியில் பழனிச்சாமியின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கின்றன. வகுப்பு நேரங்களில் கூட யாராவது ஒரு சாமியருடன் வெளியில் பேசிக்கொண்டிருக்கிறான் என்று சுவாமிகளுடன் படிக்கும் அன்பர்கள் அவரது வீட்டில் ஒரு நாள் புகார் வாசித்தனர். குடும்பத்தினர் பயந்து போய் சுவாமிகளைக் கண்டித்தாலும். அவரது போக்கில் எந்த ஒரு மாறுதலும் இல்லை.

அப்போது நாய்க்குட்டிச் சாமியார் என்கிற நாமகரணத்துடன் விக்கிரமசிங்கபுரத்துக்கு துறவி ஒருவர் வந்தார். நாத சித்தர்களான கோரக்ஷநாதர், மச்சேந்திரநாதர், ஜலாந்தரநாதர் வம்சாவழியைச் சேர்ந்தவர் இவர் நேபாளத்தைச் சேர்ந்த இந்த நாய்க்குட்டிச் சாமியார், தமிழும் நன்றாகப் பேசினார். ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிரபரணிக் கரைக்கு வந்து, விக்கிரமசிங்கபுரத்தில் நெடுநாள் தங்கிவிட்டார். ஊர்மக்கள் தனக்கிடும் உணவைத் தெருநாய்களுடன் ஒன்றாக அமர்ந்து உண்பார். அத்தகைய வேளைகளில் அப்படியே சாலை ஓரத்திலேயே உறங்கிவிடுவது இவரது பழக்கம்.

ஒரு நாள் நாய்க்குட்டிச் சாமியாரைச் சந்தித்த நம் சுவாமிகள் அவரிடம் தன்னை இழந்தார். நாய்க்குட்டிச் சாமியாருக்கு
இருக்கும் தவ வலிமை கண்டு ஆச்சிரியப்பட்டார். இருவரும் தினமும் நேரம் போவது தெரியாமல் அமர்ந்து பேசுவது வழக்கம். தான் அறிந்த நாத சித்த யோகிகளைப் பற்றியும். அவர்களது யோக முறைகளைப் பற்றியும் விரிவாகச் சொன்னார் நாய்க்குட்டிச் சித்தர். நீ உன் ஆன்மிக குருவை நோபளத்தில் தரிசிப்பாய் என்று சுவாமிகளுக்கு அருளியவர் இவர். பின்னாளில் தனக்கு குருவாக அமையவிருக்கும் சிவபுரி பாபாவை தரிசிக்கும் முன்பாக நாய்க்குட்டிச் சாமியாரால் உபதேசங்கள் அருளப்பட்டு, பக்குவமாக்கப்பட்டவர் நம் சுவாமிகள்.

காட்டுவா மஸ்தான் சாகிப் என்கிற இஸ்லாமியத் தொழிலாளி விக்கிரமசிங்கபுரத்தில் இருந்த வந்தார். கோரைப்பாய் முடைந்து விற்பனை செய்து வரும் இவர். ஆன்மிக அருள் பெற்றவர். இவருடன் சுவாமிகளுக்குப் பழக்கம் உண்டு. குண்டலினி யோகப் பயிற்சிக்காக சுவாமிகளின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியைத் தன் விரலால் சுண்டி விட்டவர் இந்த காட்டுவா மஸ்தான் சாகிப் குண்டலினி எனும் யோகக் கலைக்குள் புதைந்து கிடக்கும் ரகசியங்களை உணர்ந்து கொண்டார் சுவாமிகள்.

ஒரு நாள் மஸ்தான் சாகிப், சுவாமிகளிடம் சொன்னார். உலகத்தின் மாயை வலைக்குள் நீ சிக்கிக் கொள்ளாதே. இந்த இடத்தில் இருந்து சீக்கிரமாகப் புறப்பட்டு. குருநாதர் உனக்காக இமயத்தில் காத்துக்கொண்டிருக்கிறார். மஸ்தான் சாகிப் ஓதிய இந்த மந்திரங்கள் மனமெங்கும் எதிரொலித்துக்கொண்டே இருந்தன. ஒரு நாள் எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல், விக்கிரமசிங்கபுர வீட்டை விட்டுப் புறப்பட்டு வெளியேறி விட்டார் சுவாமிகள். திருச்செந்தூர், மேல் ஆத்தூர், கீழ் ஆத்தூர், பாளையங்கோட்டை, காயல்பட்டினம் என்று பல ஊர்களில் மனம் விரும்பிய இடங்களில் தங்கினர். தங்கிய வீடுகளும். ஆதரவு தந்தவர்களும் பெரும்பாலும் இஸ்லாமிய அன்பர்கள்தான்!

இரால் என்கிற ஊரில் பணக்கார வியாபாரியான ஒரு முஸ்லிம் அன்பர் வீட்டில் தங்கியிருந்தார் சுவாமிகள். அப்போது திடீரென அந்த முஸ்லிம் அன்பருக்குக் காய்ச்சல் வந்தது. உடல்நிலை மோசமானது. தொடர்ந்து பதினொரு நாட்கள் படுத்துபடுக்கையானார். வியாபாரியின் வீட்டுக்கே வந்து அவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள். இந்த நோய்க்கான காரணத்தை கண்டறியவில்லை; அவர்களால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. டாக்டர்களும் நம்பிக்கை இழந்தார்கள்; வியா பாரியின் குடும்பத்தினரும் மனம் கலங்கினார்கள்.

ஆஹா.... நாம் இந்த வியாபாரியின் வீட்டில் தங்கி உணவு அருந்தி இருக்கிறோம். இவருக்கு வந்த நோயை விரட்டும் பொறுப்பு எனக்கும் உண்டாயிற்றே என்ற சிந்தனையுடன் அன்றைய தினம் இரால் தெருவில் இறங்கி நடந்துகொண்டிருந்தார் பழனிச்சாமி. அப்போது இவருக்கு எதிரே வந்த (முன்பின் அறிமுகம் இல்லாத) ஒரு பெண்மணி, குறிப்பிட்ட ஒரு மூலிகையின் பெயரைச் சொல்லி, அதன் சாற்றை வியாபாரிக்குக் கொடுத்தால், உயிர் பிழைப்பார் என்கிற குறிப்பைத் தந்து விட்டுப் போனாள். அதன்படி பல இடங்களில் அந்த மூலிகையைத் தேடி அலைந்த சுவாமிகள், ஒருவாறாக அதைக் கண்டுபிடித்து வியாபாரியின் வீட்டுக்கு எடுத்து வந்தார். மயக்க நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த இஸ்லாமிய வியாபாரிக்கு மூலிகையின் சாற்றை வாயில் ஊற்றினார். ஒரு சிட்டிகை விபூதியை எடுத்து, ஒரு சில மந்திரங்களை உச்சரித்துப் பின் அதை அந்த வியாபாரியின் நெற்றியில் பூசி விட்டார்.

அவ்வளவுதான்..... சாவின் விளிம்பில் இருந்த வியாபாரியின் விழிகளில் ஒரு ஒளி பிறந்து. கைகால்களில் அசைவுகள் தெரிந்தன. வியாபாரி கண்களைத் திறந்து அரக்கப் பரக்க எழுந்து உட்கார்ந்தார். அப்போது வியாபாரியின் வீட்டில் குவிந்திருந்த உறவினர்களும் குடும்பத்து அன்பர்களும் வியந்து போய் சுவாமிகளைப் பராட்டினர். சுவாமிகளின் ஆன்மிக பலத்தைப் பிறர் அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி பயன்பட்டது. இதன் பிறகு சுவாமிகளும் இஸ்லாமிய வியாபாரியும் சிநேகம் ஆனார்கள். வியாபாரியோ பெரும் பணக்காரர். இலங்கையில் அவருக்குச் சொந்தமாக ஏராளமான எஸ்டேட்டுகளும் தொழில்களும் இருந்தன.

அடுத்த முறை தான் இலங்கை சென்றபோது சுவாமிகளையும் அழைத்து சென்றார் வியாபாரி. அங்கே சுவாமிகள் கண்டியில் ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டார். வரலாற்றுச் சிறப்பு மிக்க புத்தரின் பல் பாதுகாக்கப்பட்டு வரும் புனித ஆலயத்தையும் மாவலி கங்கை என்கிற நதியையும் இணைக்கும் இடத்தில் சுவாமிகள் தங்கியிருந்த விடுதி இருந்தது.

இந்தப் புத்த ஆலயத்தில் யானை வளர்த்து வந்தார்கள். தினமும் அந்த யானையை ஆற்றுக்குத் கூட்டி வந்து குளிப்பாட்டிச் செல்வது பாகனின் வழக்கம். அதுபோல் அன்றைய தினமும் யானையை ஆற்றுக்குக் கூட்டி வந்தான் பாகன், யானையை நன்றாக தேய்த்துக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்போது அதற்குத் திடீரென மதம் பிடித்துவிட்டது. தன்னைக் கட்டுபடுத்த  நினைத்த பாகனைத் துதிக்கையால் தூக்கிச் சுழற்றி, அவனைக் கொன்றேவிட்டது. ஆற்றில் இருந்தோரும் அருகில் இருந்தவர்களும் அரண்டு விட்டனர். ஆற்றங்கரையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும், அப்பாவி மக்களையும் சகமேட்டுமேனிக்குத் தாக்கியது யானை.

ஆற்றங்கரையில் குவிந்திருந்த பொதுமக்கள் ஓடி ஒளிந்தார்கள். அடுத்த ஒரு சில நிமிடங்களில் அங்கே எவருமே காணப்படவில்லை. துதிக்கையை இப்படியும் அப்படியும் வீசியவாறு. கடும் கோபத்துடன் அங்கே சுற்றிக்கொண்டிருந்தது யானை. போலீஸுக்கும் உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒரு படையே அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தது.

யானை பிளிறும், ஓசையும் மனிதர்களின் கூக்குரலும் தன் அறையில் இருந்த சுவாமிகளை வெளியே வரச் செய்தன. என்ன இங்கே ஏககளேபரமாக இருக்கிறது. என்று விடுதிக் கண்காணிப்பாளரிடம் விசாரித்தார் சுவாமிகள். மதம் கொண்ட ஆலயத்து யானை வெறிகொண்டு திரிவதையும். பாகனைச் சாகடித்துவிட்ட சோகச் செய்தியையும், தெருவில் கண்களுக்குப் படுகின்றவர்களைத் தாக்கி வருவதையும் அங்கே இருந்தவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர். அடுத்த கணம், யானையின் தாக்குதலுக்குப் பயந்து ஜன நடமாட்டமே இல்லாத அந்தச் சாலையில் நிதானமாக இறங்கினார் சுவாமிகள், அங்கே கூடி இருந்தவர்களும் போலீஸாரும் திகைத்துப் போயினர். சுவாமிகள் ஒற்றை ஆளாய் நின்றிருந்த சாலையில் அவருக்கு வெகு அருகே, மதம் பிடித்த அந்த யானை ஆக்ரோஷமாக நின்றுகொண்டிருந்தது. சுவாமிகளை யானை பந்தாடிவிடப் போகிறது என்று தீர்மானித்து பயந்துபோயிருந்தார்கள் அனைவரும்.

வேண்டாம் சுவாமி.... விபரீதம் வேண்டாம். ஓடி வந்து விடுங்கள். சாலையில் நிற்காதீர்கள் என்று பதற்றத்துடன் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் சுவாமிகள் அதை கேட்கவில்லை. அவரது முகத்தில் பயமோ, பீதியோ கிஞ்சித்தும் இல்லை. சாந்தம் தவழும் முகத்துடன் நின்றுகொண்டிருந்தார். அவரிடமிருந்து சுமார் பத்தடி தொலைவில் அந்த மத யானை மூர்க்கமான தோற்றத்துடன் நின்றுகொண்டிருந்தது. தன் கூர்மையான கண்களால் சுவாமிகளை ஊடுருவிப் பார்த்து மத யானை. பார்த்த மாத்திரத்திலேயே அதன் செயல்பாடுகளில் திடீர் மாற்றம் தெரிந்தது. அதன் மதமும் மூர்க்கமும் தணிந்தன. சாந்தம் தவழ்ந்து. சுவாமிகளை வணங்கி மண்டியிட்டுத் தொழுதது.

துதிக்கையை மேலே மேலே தூக்கி சுவாமிகளை ஆசிர்வதித்துக் கொண்டே இருந்தது. இதை எல்லாம் பார்த்த பிறகுதான் பயம காரணமாக ஒதுங்கி இருந்த பொதுமக்களும். யானையைச் சுட்டு வீழ்த்துவதற்காக வந்த போலீஸாரும் சுவாமிகளை நெருங்கினர். சுவாமிகளின் இறை பக்திøøயும் அவரது தவ வலிமையையும் எண்ணி, அவருடைய திருப்பாதங்களில் வீழ்ந்தனர். அங்கிருந்த பொதுமக்களைப் பார்த்து யானைக்கு வாழைப்பழம் கொடுங்கள் என்றார். அதன்பின் பழம் சாப்பிட்டுவிட்டுத் தன் இருப்பிடத்துக்கு மிகுந்த சாதுவாகத் திரும்பியது அந்த யானை.

சுவாமிகளின் புகழ் இலங்கை முழுதும் பரவியது. புத்த மடாலயங்களில் இருந்தும் கிறிஸ்துவ தேவாலயங்களில் இருந்தும், இஸ்லாமிய அன்பர்களிடம் இருந்தும். புராதனமான இந்துத் திருத்தலங்களில் இருந்தும் சுவாமிகளுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. நான் சிறுவன். என் கால்களில் எவரும் விழுந்து வணங்கவேண்டாம் என்று தன்னிடம் வருபவர்களைத் தடுத்தும் பார்த்தார். ஆனால் சுவாமிகளுக்கு இருந்த அசாத்தியமான தெய்வ பலம். பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

சுவாமிகளின் கீர்த்திகள் அறிந்து கண்டி இளவரசர் ரத்தினவதே. இவரைத் தன் அரண்மனைக்கு வரவேற்பதில் பெரும் உவகை கொண்டார். பிரிட்டிஷாரின் காலனி ஆட்சி இலங்கையில் இருந்தாலும். அரச குடும்பத்தாருக்கு அளிக்க வேண்டிய ராஜ மாரியாதைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்தே வந்தது. கண்டியில் புத்தர் பெருமானின் புனிதப் பல பாதுகாக்கப்பட்டு வரும் திருக்கோயில், கண்டி இளவரசரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அந்த ஆலயத்தைச் சார்ந்த மதம் பிடித்த யானையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டாரே ஒரு தமிழகத் துறவி.... அவரை அழைத்து நிச்சியம் கௌரவிக்கவேண்டும் என்பது இளவரசரின் நோக்கம்.

தவிர, அரச குடும்பத்துக்குப் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு சாபத்தைப் போக்க வல்லவர் இந்த சுவாமிகளாகத்தான் இருக்க முடியும் என்றும் தெளிந்தே, வரவழைக்க முற்பட்டார் இளவரசர் ரத்தினவதே. அந்த அரண்மனையில் ஏதாவது துர்மரணங்கள் நடந்துகொண்டே இருந்தன. ஒரு நல்ல பாம்பு மாயமாக அவ்வப்போது அரண்மனையில் தோன்றி பலரையும் அச்சுறுத்தி வந்தது. சுவாமிகள் திருப்பாதம் தனது அரண்மனையில் பட்டாலே, எல்லாம் சரியாகிவிடும் என்பது இளவரசரின் தீர்மானமாக இருந்தது.

சுவாமிகளும் கண்டி அரண்மனைக்கு வந்தார். அவருக்கப் பிரமண்டமான வரவேற்பு தரப்பட்டது. உணவு உண்ட பிறகு, அங்கே அமர்ந்து மாலை வேளை வரை தியானத்தில் ஈடுப்பட்டார் சுவாமிகள். இளவரசருக்குப் பெரும் மகிழ்ச்சி. சுவாமிகளின் வருகையில் பூரித்த இளவரசர், வைரக் கற்கள் பதிக்கப்பட்ட ஒரு கைக்கடிகாரத்தை அவருக்குத் தன் பரிசாக வழங்கினார். சுவாமிகள் அதுவரை கைக்கடிகாரம் கட்டிக்கொள்ளும் வழக்கம் இல்லாதவர். ஒரு இளவரசர் அன்புடன் தருகிறாரே.... அவர் மனம் புண்படக் கூடாது என்பதற்காக அதை அணிந்து கொண்டார். இது சில நிமிடங்களுக்குதான். அன்று அங்கு வந்திருந்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் (சுவாமிகளின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவர்) கேட்டுக்கொண்டதற்கிணங்க, அந்தக் கைக்கடிகாரத்தை அவருக்கே கொடுத்துவிட்டார் சுவாமிகள்.

சுவாமிகளின் கண்டி அரண்மனை விஜயத்துக்குப் பிறகு. அரச குடும்பதினருக்கு இருந்துவந்த சாபம் முற்றிலும் விலகியது. மாயமாக வந்து சென்ற நல்ல பாம்பையும் அதன் பிறகு எவரும் பார்க்கவில்லை. சுவாமிகளை அரண்மனைக்கு அழைத்தால், தன் கஷ்டங்கள் பறந்தோடி விடும் என்று இளவரசர் நம்பியது வீண் போகவில்லை.

கண்டியில் இருந்து சுமார் 300 கல் தொலைவில் இருந்த சிவனடிபாதம் என்ற மலையை சுவாமிகள் தரிசிக்கச் சென்றதும், இறைவனின் விளையாடலே. அங்கேதான் தேவியை ஒரு சந்நியாசினி ரூபத்தில் தரிசித்தார். பெங்களூருவில் இறைப் பணிகள் நிகழ்த்த இருப்பதற்கும் இந்த தேவிதான் உத்தரவு வழங்கினாள்.

இலங்கையில் உள்ள சிவனடிபாதம் என்கிற மலையை திருச்சி மகா சுவாமிகள் தன் சிறு வயதில் தரிசிக்கச் சென்ற சம்பவமே இறையருள் எப்படி அவருக்குக் கிட்டியிருக்கிறது என்பதை உணர்த்தும்.

இலங்கையில் உள்ள வியாபாரிகளும் ஆன்மிக அன்பர்களும் (இஸ்லாமியர்களும் இதில் உண்டு) கண்டியில் இருந்து ஒரு பேருந்தில் சுவாமிகளுடன் சிவனடிபாதம் மலையை தரிசிக்கப் பயணித்தார்கள். இரவு வேளையில் அந்த மலையின் அடிவாரத்தை அடைந்த யாத்ரீகர்கள் அனைவரும் களைப்பின் மிகுதியால் ஓய்வெடுக்கத் துவங்கினர். சுவாமிகளும் கட்டடத்தின் முகப்பிலேயே ஒரு மூலையில் படுத்தார். மற்ற யாத்ரீகர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஆனால் சுவாமிகளுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தார் தேவி ஆட்கொள்ள இருக்கும் அந்த வேளையில் உறக்கம் எப்படி வரும் சுவாமிகளுக்கு?

நள்ளிரவில் தன்னை யாரே தொட்டு எழுப்புவதைப் போல இருந்தது சுவாமிகளுக்கு. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார் சுவாமிகள். எதிரே - பிரகாசமான முகத்துடனும் பார்வையில் ஒரு தீட்சண்யத்துடனும் ஒரு அம்மையார் நின்று கொண்டிருந்தார். சந்நியாசினி போல் காணப்பட்டார். நல்ல உயரம். பின்னிய கூந்தலை மேலே ஏற்றிக் கொண்டை போட்டிருந்தார். மஞ்சள் நிற ஆடை உடுத்தி இருந்தார். மரத்தாலான கமண்டலத்தைக் கையில் ஏந்தி இருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே கால்களில் விழுந்து கும்பிடலாம் என்கிற தோற்றத்தில் தெய்வீக அருள் நிரம்பிக் காணப்பட்டார். அந்த அம்மையார். எனவே சுவாமிகளுக்கு இந்த அம்மையார் மேல் ஒரு அதீத நம்பிக்கை வந்தது. யார் இவர்? எதற்காக இந்த நள்ளிரிவில் வந்து என்னை எழுப்பவேண்டும் என்று குழப்பி. அம்மையாரின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சுவாமிகளை மிகுந்த சிநேக பாவத்துடன் பார்த்துப் புன்னகைத்த அம்மையார் திருவாய் மலர்ந்தார். வா, பழனிச்சாமி...சீக்கிரம் எழுந்து வா.... உன்னை மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்லவே நான் வந்திருக்கிறேன். இங்கு உறங்கிக் கொண்டிருப்பவர்கள் விழித்தெழுவதற்குள் நாம் திரும்பி வந்து விடலாம்.

அந்த அம்மையாரின் குரலும் அதிகார தோரணையும் அழைத்த விதமும் சுவாமிகளை நெகிழ்ச்சியடைய வைத்தன. இவர் நம்பத் தகுந்தவர்தான் என்று திடமாகத் தீர்மானித்துக் கொண்டு அவரைப் பின்தொடர்ந்து அந்த நடுநிசி வேளையில் நடந்தார். சில நிமிடப் பயணம் மலையுச்சியை அடைந்தார்கள். அங்கே பல அதிசயங்கள் நடந்தன. கமண்டலத்தினுள் கை விட்டு ஒரு தேவியின் திருவுருவ பொம்மையை எடுத்தார் அம்மையார். அது களிமண்ணால் செய்யப்பட்ட கச்சிதமான பொம்மை. இந்த பொம்மையைப் பார்த்ததும் சுவாமிகள் ஆச்சரியமடைந்தார். காரணம்-அவர் சிறுவனாக இருந்தபோது பூஜித்து விளையாடிய பொம்மை அது!

என்ன ஆச்சரியத்துடன் பார்க்கிறாய்? சிறு வயதில் நீ பூஜை செய்த பொம்மை என்று வியக்கிறாயா? இதுதான் பராசக்தி. இந்த பொம்மையும் நானும் ஒன்றே என்றார் அம்மையார். அதையடுத்த விநாடிகளில் இருந்து அம்மையாரின் முகத்தில் பிரகாசம் கூடியது. இதுவரை ஒரு பெண் போல் தோற்றமளித்த அந்த உருவம். அதன் பின் சுவாமிகளுக்குத் தெரியவே இல்லை. அம்மையாரின் குரல் வந்த இடத்தில். ஏதோ ஒரு ஒளிக் கூட்டம் கற்றையாகத் குவிந்திருப்பது போல் பட்டது. கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அம்மையாரின் குரல் மட்டும் தெளிவாக சுவாமிகளுக்குக் கேட்டது. தேவியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிருக்கிறாய் நீ. உன் குருவை விரைவிலேயே தரிசிப்பாய். கயிலாய மலை தரிசனம் திருப்தியாக அமையும். உன்னுடைய ஆன்மிகப் பணிக்குக் கன்னட நாட்டைத் தேர்ந்தெடுப்பாய் என்று அசரீரி ஒலித்தது. அதன் பின், அந்த ஒளிப் பிழம்பு அங்கிருந்து உயரே உயரே நகர்ந்து மறைந்தது. சுவாமிகள் அங்கேயே தன்னிலை மறந்து. மயக்க நிலையில் ஆழ்ந்தார். பிறகு, நினைவு வந்து கண் விழித்தபோது, அம்மையார் தரிசனம் தந்த இடத்தில் பாத அடையாளம் பளிச் சென்று தெரிந்தது. அங்கேயும் ஒரு பிரகாசம் அம்மையார் வந்த போனதன் அடையாளமாக அவரது பாத தரிசனம் பெற்றவர், தன்னுடன் வந்த யாத்ரீகர்களிடம் இது பற்றி எதுமே சொல்லவில்லை.

இதன் பின் மூன்று மாதங்கள் இலங்கையில் இருந்துவிட்டு. இந்தியா திரும்பினார். திருச்சியில் தன் தாய்மாமன் துரைசாமி நாயக்கர் வீட்டில் சிறிது காலம் தங்க விரும்பிய சுவாமிகள் அவரது இல்லத்தில் தங்கினார். விநாயகர் அருளும் மலைக்கோட்டையில் அமைதியான ஓர் இடத்தில் அமர்ந்து தியானம் செய்வார். ராம சாஸ்திரி என்கிற பாண்டிதரிடம் வேத பாடங்களை-அட்சரம் பிசகாமல் கற்றுத் தேர்ந்தார். அப்போது சுவாமிகளுக்கு இருபது வயது நிரம்பியிருந்தது. திருமணம் செய்ய வேண்டும் என்கிற குடும்பத்தாரின் விருப்பத்தைப் புறக்கணித்தார். தமது வாழ்க்கை ஆன்மிகத்துக்கென்று அர்ப்பணிக்கப்பட்டுவிட்டதாக அவர்களிடம் கூறினார்.

இலங்கை - கண்டியில் சுவாமிகளுக்குப் பழக்கமான நகரத்தார் அன்பர்கள் திருச்சியில் சுவாமிகளைச் சந்தித்து, தங்களது பகுதியான செட்டிநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்த சுவாமிகள் அழைப்பை ஏற்றார். பிரமாண்ட வரவேற்புடன் சுவாமிகளைத் தங்கள் பகுதிக்கு அழைத்துச் சென்று திருச்சி சுவாமிகள் என்று இவரை அங்கே அறிமுகப்படுத்தினார்கள். அன்றிலிருந்து பழனிச்சாமி என்கிற பெயர் மெள்ள மறைந்து. திருச்சி சுவாமிகள் என்பதே நிலைத்து விட்டது. நகரத்தார்கள் மேற்கொண்டு நடத்தி வரும ஆன்மீகப் பணிகளுக்கு சுவாமிகள் உதவினார். செட்டிநாடு அன்பர்கள் சுவாமிகளை தங்கள் குருவாகவும் ஒரு துறவியாகவும் மதித்து நடத்தினர். வழிபாடுகளே நடக்காமல் இருந்த அந்த பகுதி ஆலயங்களில் சுவாமிகளின் முயற்சியால் பூஜைகள் துவங்கின. புனரமைப்புப் பணிகள் நடந்தன. சுவாமிகளின் முயற்சியால் எண்ணற்ற திருக்கோயில்கள் புதுப் பொலிவு கொண்டன.

ஒரு முறை வெற்றியூர் எனும் கிராமத்தில் கிராம தேவதை ஒன்றின் ஆலயத்தைச் செப்பினிடும் பணியை சுவாமிகளின் முன்னிலையில் அந்த ஊர்க்காரர்கள் மேற்கொண்டனர். அப்போது தங்க நகைகள் அடங்கிய பெட்டி ஒன்று இந்த ஆலய வளாகத்தைத் தோண்டும்போது கிடைக்கும் என்றார் சுவாமிகள். அதன்படி கோயில் வளாகத்தைத் தோண்டிக் கொண்டிருக்கும்போது. சுவாமிகள் சொன்ன இடத்தில் தங்கப் புதையல் கிடைத்தது. ஒருமுறை தேவகோட்டை சிவாலயத்துக்கு சுவாமிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ஏதோ ஓரு அமானுஷ்ய சக்தி சுவாமிகளை ஆட்கொள்ள.... அவர், இந்த இடத்தில் பிடாரி அம்மனுடைய ஒரு கோயில் புதையுண்டு கிடக்கிறது. அதை மீண்டும் கண்டுபிடித்து வழிபாடுகளை நடத்துங்கள் என்றார். அதன்படி. அந்த ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டு வழிபாடுகள் துவங்கின.

எண்ணற்ற யாத்திரைகளையும் சுவாமிகள் மேற்கொண்டார். ராமநாதபுரம், திருவண்ணாமலை, சென்னை ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டார். காஞ்சி மகா ஸ்வாமிகள் போன்ற அருளாளர்களைச் சந்தித்து. விவாதங்களை மேற்கொண்டார். சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டார். திருவண்ணாமலையில் ஈசான்ய மடத்தில் ஸ்ரீவித்யா ஞானம் பெற்றார் சுவாமிகள். இதன் பிறகுதான் தனக்கு உண்டான குருவைத் தேடி அடைய வேண்டும் என்கிற விருப்பம் சுவாமிகளுக்கு ஏற்பட்டது. சுவாமிகளுக்கு அப்போது வயது 29. சுவாமிகளின் வட இந்திய யாத்திரைக்கு நகரத்தார்கள் உதவ முன்வந்தனர். தவிர, சுவாமிகளோடு அவர்களும் இந்த யாத்திரையில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர். அதன்படி சென்னையில் துவங்கிய யாத்திரை பல காலத்துக்கு நீடித்தது. ஓங்கோல், விஜயவாடா ஸ்ரீகனகதுர்கா, மங்களகிரி ஸ்ரீபானக நரசிம்மர், ராஜமகேந்திரவரம் ஸ்ரீகோடிலிங்கேஸ்வரர். பூரி ஜகந்நாதர், கல்கத்தா ஸ்ரீகாளி திருக்கோயில், பேளூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம், தாரகேஸ்வரம், காசி, விந்தியாசலா, அலஹாபாத், அயோத்தி, கயா ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத் போன்ற திருத்தலங்களை தரிசித்து டெல்லியை அடைந்தார் சுவாமிகள்.

டெல்லியில் தங்கியிருந்தபோது ஏனோ, காசி மாநகரத்துக்கு மீண்டும் செல்லவேண்டும் என்று அவரது மனம் விரும்பியது. அதன்படி காசிக்குப் பயணமானார். காசி ஸ்ரீ விஸ்வநாதர், ஸ்ரீவிசாலாட்சி அம்மன், ஸ்ரீஅன்னபூரணி அம்மன் ஆகிய திருமேனிகளை தரிசித்தார். அன்று இரவு காசியில் தங்கி இருந்தபோது நெடுநேரம் ஆகியும் உறக்கம் வரவில்லை. ஏதோ ஓரு அசௌகரியத்தை உணர்ந்தார். உடனே, அம்மனை நினைந்து தியானத்தில் அமர்ந்தார். ஸ்ரீவிசாலாட்சி அம்மன் அவருக்குக் காட்சி தந்தார். அடுத்த சில விநாடிகளில் அந்த அன்னையின் உருவம் மெள்ள மெள்ள மறைந்து ஒரு வயோதிகரின் தோற்றம் புலப்பட்டது. வெண்ணிற ஆடை அணிந்து நீண்ட தாடியுடன் கூடிய அவர் ஒரு தாமரை மலரின் மீது அமர்ந்து காட்சி தருவதுபோல் தெரிந்தது. அந்த உருவத்தைக் கையெடுத்துக் கும்பிட்டார் சுவாமிகள். இவரே தனக்கு குருவாக அமைவார் என்கிற உணர்வு அப்போது சுவாமிகளுக்கு ஏற்பட்டது, எங்கிருந்தோ எழுந்த ஓம் எனும் பிரணவ ஒலி, சுவாமிகளின் இந்த உணர்வை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் இருந்தது. நோபளத்தில் குருதேவரைச் சந்திப்பாய் என்று எற்கெனவே கிடைத்த வாக்குபடி, அடுத்த நாளே நேபாள யாத்திரையைத் துவங்கினார். குருவைக் கண்டுபிடிக்கும் பணிக்கு அன்னை விசாலாட்சியையே தன் துணைக்கு அழைத்தார் சுவாமிகள். குருவை அடையாளம் காட்டி அருளிய அன்னை, அவரைக் கைவிடவில்லை.

நேபாளத்தில் பாகமதி நதியில் நீராடி புனிதத் தலங்களான நீலகண்டேஸ்வரர். பைரவர், விஷ்னுகங்கா, மார்கண்டேயர், பசுபதிநாதர், குகாம்பிகா ஆகியவற்றை தரிசித்தார். குகாம்பிகை ஆலயத்தில் இருந்தபோதுதான் ஒரு நோபள அந்தணன், சுவாமிகளை யதேச்சையாகச் சந்தித்து இன்று மாலை உங்களை இங்கிருக்கும் ஒரு துறவியிடம் அழைத்துச் செல்கிறேன். தாங்கள் அவசியம் அவரைச் சந்திக்கவேண்டும். அவர் பெயர் சிவபுரி பாபா என்றான்.

சிவபுரி பாபா என்ற பெயரைக் கேட்டவுடன். சுவாமிகளுக்கு மெய் சிலிர்த்தது. ஒருவேளை தான் தேடிக்கொண்டிருக்கும் குரு இவராகத்தான் இருக்குமோ என்று மனம் பரபரத்தது. சொன்ன மாதிரியே அன்று மாலை சிவபுரி பாபா என்கிற துறவியிடம் சுவாமிகளை அழைத்துச் சென்றான் அந்த இளைஞன் இருவரும் சந்தித்தனர். இருவரும் தங்களுக்குள் இருக்கும் கர்மத்தின் பிணைப்பை அந்த க்ஷண நேரத்தில் உணர்ந்துகொண்டார்கள். கேரளத்தில் நம்பூதிரி குடும்பத்தில் அவதரித்த சிவபுரி பாபா. 137 ஆண்டுகள் வசித்தார் என்றால், நம்புவதற்குச் சற்று சிரமமாகத்தான் இருக்கும். ஆப்கானிஸ்தான், பெர்சியா, மெக்கா, ஜெருசலேம், இஸ்தான்புல், ரோம், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, மெக்ஸிகோ, தென் அமெரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் என்று எண்ணற்ற நாடுகளில் பயணித்த சிவபுரி பாபா, தன் வாழ்க்கையில் சுமார் 45 ஆண்டு காலம் வெளிநாட்டு வாழ்க்கையில் கழித்துள்ளார்.

தனக்கான குரு இவர்தான் என்று சுவாமிகளும், தன்னிடம் வந்து சேரவேண்டிய சீடன் இவன்தான் என்று சிவபுரி பாபாவும் புரிந்து கொண்டனர். நான் உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். என்று சுவாமிகளைப் பார்த்துக் கூறினார் சிவபுரி பாபா . ஞான தீட்சை, திருஷ்டி தீட்சை, சந்நியாச தீட்சை போன்றவற்றை சிவபுரி பாபாவிடமிருந்து பெற்றார் சுவாமிகள். குருநாதரின் கண்களில் இருந்து பிரகாசமாகக் கிளம்பிய ஒரு ஒளி, சக்கரம்போல் கழன்று வந்து தன் கண்களுக்குள் ஐக்கியமானதை சுவாமிகள் உணர்ந்தார். சிவரத்னபுரி பகவத் பாதாச்சார்யா என்று நாமகரணம் சூட்டப்பட்டார். என்றாலும், தான் திருச்சி சுவாமிகள் என்று அழைக்கப்படுவதையே பெரிதும் விரும்பி. அதையே தன் நாமமாக  ஆக்கிக்கொண்டார்.

ரொம்பவும் எளிமையான போதனைகளைத் தன் வாழ்நாளில் உபதேசித்து வந்தார். சிவபுரி பாபா. ஒழுக்கம் இல்லாவிட்டால், ஆன்மிகத் துறவு வாழ்க்கையில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பார் பாபா. திருச்சி சுவாமிகளுக்கு. அவரின் குருவான சிவபுரி பாபா ஓர் அன்புக்கட்டளை இட்டார். பாரதத்துக்குத் திரும்பிச் சென்று தர்மத்தை எங்கும் நிலைநாட்டு. ஆலயம் கட்டு! என்றார். அங்கிருந்து புறப்பட்டு கயிலாய தரிசனம் கண்டார். அங்கே மறைபொருளாக தேவி அமர்ந்துள்ளதையும் கண்டு தரிசித்தார். தன் வழிபாட்டுத் தெய்வமான அன்னை ராஜராஜேஸ்வரி அரியணையில் அமர்ந்து அருள் பாலிக்கும் தரிசனம் பெற்றார். அந்த ராஜராஜேஸ்வரி-சிறு வயதில் தான் களிமண்ணில் செய்து விளையாடிய பொம்மையைப் போன்றும். சிவனடிபாதம் மலையில் அம்மையாரால் கமண்டலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட உருவத்தைப் போன்றும் காட்சி தந்தது.

கயிலாயத்தில் இருந்து திருச்சி சுவாமிகள் புறப்படுமுன் அவருக்கு துர்க்கை, லட்சுமி சரஸ்வதி ஆகிய தேவியர் காட்சி கொடுத்து, பாரதத்தின் தென்பகுதியில் ஆஸ்ரமம் அமைத்து ஆலயம் கட்டு! என்று அருளினார்கள். குரு மற்றும் தெய்வங்களின் தரிசனங்களால் மகிழ்ச்சியடைந்த திருச்சி சுவாமிகள் பாரதம் திரும்பினார். வரும் வழியில் பெங்களூரை அடைந்தார். அங்குள்ள பக்தர்கள் இவரை வணங்கினர். மக்களின் அன்பினாலும் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலினாலும் கவரப்பட்ட திருச்சி சுவாமிகள். சில காலம் அங்கு தங்க விரும்பினார். கெஞ்சனஹள்ளியில் (தற்போதைய ராஜராஜேஸ்வரி நகர்) ஸ்வாமிகள் தங்குவதற்கு அன்பர் ஒருவர் குடில் அமைத்துக் கொடுத்தார். தெய்வத்தின் ஆணை இங்குதான் நிறைவேறியது.

1960-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மகர சங்கராந்தி அன்று தனக்குப் பாத பூஜை செய்ய விரும்பிய பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, இரண்டு பக்தர்களுடன் மைசூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார் சுவாமிகள். பெங்களூருக்குத் தெனமேற்கே சுமார் ஆறு மைல் தொலைவு சென்றபோது தனக்கு மேலே மூன்று கருடன்கள் சுற்றிச் சுற்றி வருவதைக் கவனித்தார். கயிலாயத்தில் தனக்குக் காட்சி அளித்த, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருடைய உருவங்களை அந்தப் பட்சிகளில் கண்டார். காளியின் அம்சத்தில் இந்த தேவியர் தனக்கு உணர்த்த இருக்கும் செய்தியை ஓரளவு ஊகித்தார் சுவாமிகள், சட்டென்று வாகனத்தை நிறுத்திச் சொல்லி, இறங்கினார். கெஞ்சனஹள்ளி கிராமத்தை நோக்கிச் செல்லும் ஒரு சிறிய கால்வழித்தடம் அவர் கண்களுக்குப் புலப்பட்டது. அதன் வழியே நடந்தார். கருட பட்சிகளும் தொடர்ந்து வந்தன. கொய்யா மரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்தில் இருந்த குடிலின் மேல் அந்தக் கருட பட்சிகள் மையமிட்டுச் சற்றி வந்தன. (தற்போதும் ஆலயப் பிரதேசத்தில் கருடன்கள் வட்டமிடுவதைச் சிலிர்ப்போடு தரிச்சிக்கறார்கள் பக்தர்கள்!) உடனேயே அந்த இடத்தில் தனது நிரந்தரமான ஆஸ்ரமத்தை அமைக்க எண்ணம் கொண்டு செயல்படுத்தினார் சுவாமிகள்.

அத்ரி மகரிஷியும் அவரின் பத்தினியும் மகா பதிவிரதையுமான அனுசூயாதேவியும் வசித்த தபோவனம், இங்குதான் இருந்தது என்பது பின்னர்தான் சுவாமிகளுக்குத் தெரியவந்தது. கெஞ்சனஹள்ளியில் ஸ்ரீ சிவரத்னபுரி சுவாமிகள் என்ற திருச்சி மகா சுவாமிகள் 1960 ஆம் ஆண்டு ஸ்ரீகைலாஸ ஆஸ்மர மஹா சமஸ்தானத்தை ஸ்தாபித்தார். அதிலிருந்து ஆஸ்ரமத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்றது. தெய்வங்கள் சுட்டிகாட்டிய இடத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரியின் ஆலயத்தை நிர்மாணித்தார்.

உலகைக் காத்து வரும் இந்த ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மனுக்குத் தனிக் கோயில்கள் சில இடங்களில் அமைந்துள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று. பெங்களூருவில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோயில். மூன்று கண்களை உடைய மிக அழகான தாய் வடிவில் இந்த அம்பாளை உபாசகர்கள் காண்கின்றனர். இந்த ராஜராஜேஸ்வரி அம்மன், புன்னகைக்கும் வதனம் மற்றும் நான்கு கைகளுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். நான்கு கைகளிலும் அங்குசம். பாசம், கரும்பு வில், ஐந்து புஷ்பங்கள் கொண்ட அம்புகள் ஆகியவற்றோடு காட்சி தருகிறாள். அன்னையின் தலையில் சந்திரன் பிரகாசிக்கிறது. பெங்களூருவில் ஆசிரமம் அமைந்துள்ள இந்த இடம் 64 சக்தி பீடங்கள் இருந்து மறைந்த பகுதி என்று சுவாமிகள் வெளிப்படுத்தினார். தனக்கு இந்த இடம் கர்நாடகத்தின் கயிலாச பீடமாகக் காட்சி அளித்தது என்றும் சொல்லி இருக்கிறார்.

தனது 75 ஆவது வயதில் (ஜனவரி 2005 இல்) மகா சமாதி அடைந்தார் திருச்சி சுவாமிகள். அவருக்கு பின் ஆஸ்மரப் பணிகளைப் பொறுப்பேற்று இன்றுவரை திறம்பட நடத்தி வருகிறார். ஸ்ரீஜயந்திரபுரி ஸ்வாமிகள். திருச்சி ஸ்வாமிகள் தனது இறுதிக்காலம் வரை வெள்ளை ஆடையை மட்டுமே அணிந்தார். டெலிபோனை பயன்படுத்தியதில்லை. மோதிரம், செயின் போன்ற ஆபரணங்கள் எதையும் அணிந்ததில்லை. டி.விக்குப் பேட்டி கொடுத்ததில்லை. பேனாவைத் தொட்டதில்லை. காபி, டீ போன்ற பானங்களைக் குடித்ததில்லை. திருச்சி மஹா ஸ்வாமிகள் பல உபதேச மொழிகளைத் தன் பக்தர்களுக்கு அருளி இருக்கிறார். மனம் சம்பந்தப்பட்ட அவர் சொல்லும் ஒரு உபதேச மொழி நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. துன்பங்களில் பெரும்பாலானவை உடல் சம்பந்தப்பட்டவையாக இருப்பினும், மனம்தான் துன்பங்களைப் பகிர்ந்தளிக்க்கூடிய விருந்தாளியாகச் செயல்படுகிறது. மனமானது மனம் வைத்தால், நரகத்தையும் சொர்க்கமாக்கிக் கொள்ளும். சொர்க்கத்தையும் நரகமாக்கிக் கொள்ளும். அமைதியை, சாந்தியைத் தன்னுள்ளே வளர்த்துக் கொள்ளப் பழகுங்குள். அதுதான் நரகத்தையும் சொர்க்கமாக்கிக் கொள்ளும்.

 
மேலும் மகா சுவாமிகள் »
தலம்    : பெங்களூர் ராஜராஜேஸ்வரியில் நகர்

சிறப்பு    : திருச்சி சுவாமிகள் அதிஷ்டானம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.