பழநிகோயில் கோசாலை சாணத்தில் இயற்கை முறையில் விபூதி தயாரிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2014 11:12
பழநி: பழநிகோயிலில் கோசாலை பசுமாட்டு சாணம் மூலம் இயற்கை முறையில் விபூதி தயாரிக்கும் பணி துவங்கப்பட்டது. பழநி கோயில் சார்பில் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயத்திலுள்ள கோசாலையில் 16 மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் சாணத்திலிருந்து இயற்கை முறையில் விபூதி தயார் செய்வதற்காக கடலுõரை சேர்ந்த முருகதாஸ், பாஸ்கர், கமலக்கண்ணன், முருகன் ஆகியோர் பழநி வந்துள்ளனர். கோயில் அன்பு இல்ல வளாகத்தில் விபூதி தயாரிப்பு நேற்று துவங்கியது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா பங்கேற்றனர். தயாரிப்பாளர்கள் கூறியதாவது: கடலுõர் பாடலீஸ்வரர் கோயிலில் இப்பணியை செய்துள்ளோம். விபூதியில் வாசனை திரவியங்கள் கலக்காமல் சுத்தமான முறையில் தயார் செய்து அதை ஆண்டவனுக்கு அபிஷேகிக்க வேண்டும். பசுமாட்டின் சாணம் மற்றும் பதர் (அரிசி இல்லாத நெல்) மூலம் விபூதி தயார் செய்கிறோம். வாசனைக்காக வேட்டிவேர் சேர்க்கப்படும், என்றனர்.
கோயில் நிர்வாகிகள் கூறியதாவது: ஒப்பந்ததாரர் மூலம் வரவழைக்கப்படும் விபூதி அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தற்போது அன்பு இல்லத்தில் இயற்கையான முறையில் தயார் செய்யப்படும் விபூதி முதற்கட்டமாக உச்சிகாலபூஜை, சாயரட்சை பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். படிப்படியாக விபூதி தயாரிப்பு பணி விரிவுபடுத்தப்படும், என்றனர்.