பதிவு செய்த நாள்
12
டிச
2014
11:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம், நேற்று முன்தினம் நடந்தது. இந்த கோவிலில், 75.40 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள், ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்க உள்ளன. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கி வருகிறது, வழக்கறுத்தீஸ்வரர் கோவில். இந்த கோவிலில், சோமவார பூஜையின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வழக்குகளில் இருந்து மீண்டு வர, அரசியல்வாதிகள் உட்பட பலரும் சிறப்பு பூஜை செய்வது, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வர, அக்கட்சியினர் சிறப்பு யாகம் செய்தனர். அவரது தோழி சசிகலா இக்கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜை செய்துவிட்டு சென்றார். இந்த கோவிலில் ராஜ கோபுரம் இல்லை. பிரம்மோற்சவம் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதனால் கோவிலை சீரமைத்து, திருப்பணி முடிந்த பிறகு மீண்டும் பிரம்மோற்சவம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, மூலவர் சன்னிதானம் தவிர, நவகிரகம், கொடிமரம், அன்னதான கூடம், தெப்பக்குளம், சுற்றுச்சுவர் போன்ற பணிகளுக்கான பாலாலயம், நேற்று முன்தினம் காலை நடந்தது. 36 லட்சம் ரூபாயில், மூன்று நிலை கொண்ட புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட உள்ளது. அதோடு, 18.60 லட்சம் ரூபாயில் புதிய முன் மண்டபமும், 14.40 லட்சம் ரூபாயில் அன்னதான கூடமும், 6.40 லட்சம் ரூபாயில் சுற்றுப்பிரகார மும் சீரமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதை தவிர, நன்கொடையாளர்கள் நிதியில் இருந்தும் சில பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ”ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டடப்பணி துவங்கும். ஆறு மாதங்களில் பணிகளை முடிக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுஉள்ளனர். அதன் பின், மூலவர் விமான சீரமைப்பு பணி நடக்கும். அதுவரை வழக்கம் போல் வழிபாடு நடக்கும்,” என, கோவில் செயல் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.