பதிவு செய்த நாள்
12
டிச
2014
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் குபேரலிங்கத்தில் உள்ள உண்டியலில், மூன்று லட்ச ரூபாயை திருடி சென்ற, மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் வரும் பக்தர்கள், ஏழாவது லிங்கமாக அமைந்துள்ள குபேரலிங்கத்தை, வழிபட்டு சென்றால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில், இங்கு வந்து வழிபடுகின்றனர். இங்குள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையும் செலுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த, கார்த்திகை தீப திருவிழாவின் போது, இங்கு வந்த ஏராளமான பக்தர்கள், குபேரலிங்கத்தை வழிபாடு செய்து, காணிக்கையை செலுத்தி சென்றனர். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல கோவில் பூசாரிகள், கோவிலை பூட்டி சென்றனர். நேற்று காலை, கோவிலை திறந்தபோது ஆங்காங்கே சில்லறை காசுகள் சிதறி கிடந்ததும், உண்டியலை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, அண்ணாமலையார் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்டியலில், மூன்று லட்சம் ரூபாய் இருக்கலாம் என, கோவில் பூசாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.