வழக்கமாக எல்லா சுவாமிகளுக்கும் பூஜையின்போது தேங்காய் உடைப்பது உண்டு. ஆனால் ஐயப்பனுக்கு மட்டும் எதற்காக நெய்த்தேங்காய்? ஏன் அதனை சுமந்து செல்ல வேண்டும்? தேங்காய், முக்கண்ணனான ஈசனின் அம்சமானது. பசு, திருமகளின் அம்சம். திருமகள் எப்போதும் வாசம் செய்யும் இடம் திருமாலின் திருமார்பு என்பதால் பாலுக்குள் ஒளிந்திருக்கும் நெய்யானது மகாவிஷ்ணுவின் அம்சமாக கூறப்படுகிறது. சிவ-விஷ்ணு ஐக்கியத்தால் அவதரித்த ஐயப்பனுக்கு அந்த ஐக்கிய பாவத்தை உணர்த்தும் வகையில் தேங்காயில் நெய் நிரப்பப்படுகிறது. அந்த இணைப்பினால் ஐயனின் அவதாரம் நிகழ்ந்ததைக் குறிக்கும் வகையில் நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. பொய்யில்லா மெய்யான அன்போடு உள்ளத்தைத் திறந்துவைத்தால் அங்கே பக்தி மணம் கமழ ஐயன் எழுந்தருள்வார் என்பதை சொல்லாமல் சொல்லுவதே நெய்த்தேங்காயின் தத்துவம்.