பதிவு செய்த நாள்
13
டிச
2014
11:12
கீழக்கரை: கோயில் கோபுரங்களில் வளரும் செடிகளை ’ஆசிட்’ ஊற்றி அழிக்கும் பணியில் நெல்லையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோயிலில் உற்சவருக்கு சீர்பாத தூக்கியாக, கடந்த 26 வருடங்களாக பணிபுரிந்தவர் சங்கரன், 55. தற்போது, கோயில் கோபுரங்களின் மீது வளரும் செடிகளை அகற்றி வருகிறார். உத்திர கோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலின் ஏழு நிலைகளிலும் வளர்ந்துள்ள செடிகளை அகற்றினார்.
அவர் கூறியதாவது: ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். இதுவரை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், திருக்கழுக்குன்றம் சக்திபுரீஸ்வரர், தென்காசி காசிவிஸ்வநாதர், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், திருநெல்வேலி நெல்லையப்பர், திருவிடை மருதூர் நாறும் பூநாதர் உள்ளிட்ட சிவாலயங்களின் கோபுர உச்சியில் வளர்ந்திருந்த செடிகளை அகற்றி உள்ளேன். பறவைகள் உண்ட பழங்களின் மிச்சம் மற்றும் எச்சங்களால், சரியான சீதோஷ்ண நிலை உருவாகும்போது கோபுரங்களில் செடிகள் வளர்ந்து விடும். தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கோபுரக்கலசம் வரை சென்று, இதற்கென விசேஷமாக தயாரிக்கப்பட்ட ’ஆசிட்’டை செடியின் மீது ஊசி மூலம் செலுத்தி விடுவேன்.
இரு நாட்களில் செடிகள் பட்டுப்போய் விழுந்து விடும். ஒருமுறை திருக்கழுக்குன்றம் கோபுர உச்சியில் பணிசெய்தபோது, என்னை பருந்து விரட்டியது. தென்காசியில் குரங்கு கடித்தது, காஞ்சிபுரத்தில் தேனீக்கள் தாக்கி முகம், கை, கால்கள் வீங்கின. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் கடந்த 4 ஆண்டுகளில் திருவாடானை, தேவிபட்டினம், நயினார்கோவிலில் கோபுரச் செடிகளை அகற்றியுள்ளேன். மூளை வளர்ச்சியற்ற என் மகனை சிவனாக கருதி பராமரித்து வருகிறேன், என்றார்.