பதிவு செய்த நாள்
16
டிச
2014
02:12
திருப்பூர் : மண்டல பூஜை விழாவையொட்டி, பவானி கூடுதுறையில் ஐயப்ப சுவாமிக்கு, ஆறாட்டு உற்சவம் நேற்று நடைபெற்றது. மண்டல பூஜை விழா, திருப்பூர் காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் நடைபெற்று வருகிறது. நேற்று, பவானி கூடுதுறையில் ஐயப்ப சுவாமிக்கு, ஆறாட்டு உற்சவம் நடந்தது. காலை 7:00 மணியளவில், உற்சவ விக்கிரகத்துடன் பக்தர்கள் குழு, பவானிக்கு சென்றது. சபரிமலை முதன்மை தந்திரிகளின் பிரதிநிதிகளாக, அவர்களது சிஷ்யர்கள் 10 பேர், உற்சவத்தில் பங்கேற்றனர்.கூடுதுறை திரிவேணி சங்கமத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. புனிதநீரால் உற்சவ மூர்த்திக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், நெய் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், சுவாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, சரண கோஷங்களுக்கு மத்தியில் தீபாராதனை காட்டப்பட்டது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட் மற்றும் ஸ்ரீஐயப்பன் பக்த ஜன சங்கத்தினர் பங்கேற்றனர். மாலை 4:00 மணியளவில், ஐயப்ப உற்சவ விக்ரகத்துடன், பக்தர்கள், திருப்பூர் ஐயப்பன் கோவிலை வந்தடைந்தனர். பின், விஸ்வேஸ்வரர் கோவிலில் இருந்து, பஞ்சவாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் ஊர்வலம் துவங்கியது.கஜலட்சுமி தியேட்டர் ரோடு, நொய்யல் பாலம், கோர்ட் வீதி, டவுன்ஹால் மேம்பாலம், காலேஜ் ரோடு வழியாக, கோவிலை சென்றடைந்தது; திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.