பதிவு செய்த நாள்
16
டிச
2014
02:12
திருவள்ளூர்: கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, நேற்று, தீர்த்தீஸ்வரர் கோவிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது.
கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில், சிவன் கோவில்களில் சோமவார வழிபாடு நடத்தப்படும். நேற்று, கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, திருவள்ளூர் திரிபுர சுந்தரி உடனுறை தீர்த்தீஸ்வரர் கோவிலில், சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கோவில் வளாகத்தில், 108 வலம்புரி சங்குகளில் தீர்த்தம் நிரப்பி, பூஜைகள் செய்யப்பட்டன. மாலை 6:00 மணிக்கு, சங்குகளில் பூஜிக்கப்பட்ட புனித நீரை மூலவருக்கும், அம்பிகைக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும் சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேகம் நடந்தது. பின், கோவில் உட்பிரகாரத்தில் உற்சவர் உலா நடந்தது. திருவள்ளூர், பூங்கா நகர் சிவா - விஷ்ணு கோவிலில் உள்ள, புஷ்பவனேஸ்வரருக்கு காலையில் அபிஷேகமும், மாலை திருத்தேர் உலாவும் நடந்தது. மணவாள நகர் அடுத்த, கண்ணைய நகரில் உள்ள மங்களேஸ்வரர், திருப்பாச்சூரில் வாசீஸ்வர சுவாமி ஆகிய கோவில்களிலும், நேற்று காலை அபிஷேகம் நடைபெற்றது. மாலை, விநாயகர் சபையில் உள்ள விநாயகர்கள், வாசீஸ்வரர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் உட்புறப்பாடு நடைபெற்றது.