19.15 மணி நேரம் தரிசன வசதி 4.45 மணி நேரம் மட்டுமே அடைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2014 03:12
சபரிமலை: சபரிமலையில் இனி ஒரு நாளில் (24 மணி நேரம்)முதல் 19.15 மணி நேரம் தரினம் நடத்தலாம். அதற்கேற்ப நடைதிறந்திருக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் அதிகாலை நான்கு மணிக்கு நடை திறந்து பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மாலை நான்கு மணிக்கு நடை திறந்து இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். கூட்டம் அதிகமாகும் போது அதிகாலையில் ஒரு மணி நேரம் முன்னதாக நடை திறக்கப்படும். அதுவும் தந்திரியுடன் ஆலோசனை நடத்தி அந்தந்த நாட்களில் இருக்கும் நிலைமையை பொறுத்து முடிவு செய்யப்பட்டு வந்தது. அண்மையில் மாலையில் நடை திறக்கும் நேரம் மாலை நான்கு மணிக்கு பதிலாக மூன்று மணிக்கு மாற்றி அமல்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் மேலும் நடைதிறந்திருக்கும் நேரத்தை அதிகரித்து தேவசம்போர்டு உத்தரவிட்டது. புதிய அட்டவணைப்படி காலை மூன்று மணிக்கு நடை திறக்கப்பட்டு, பகல் 1.45 மணிக்கு அடைக்கப்படும். அதன் பின்னர் மாலை மூன்று மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30க்கு அடைக்கப்படும். இதன் மூலம் ஒரு நாளான 24 மணி நேரத்தில் 19 மணி 15 நிமிடங்கள் நடை திறந்திருக்கும். இது பக்தர்களுக்கு வசதி என்றாலும் கோயில் ஊழியர்கள் மற்றும் பூஜாரிகளின் ஓய்வு நேரம் குறைந்துள்ளது. கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் நல்ல தரிசனம் கிடைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.