பதிவு செய்த நாள்
17
டிச
2014
02:12
தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாவதையொட்டி, அனைத்து கோவில்களிலும், நேற்று சிறப்பு யாகம் மற்றும் பரிகார பூஜைகள் நடந்தது. குரு ஸ்தலமாக இருந்தாலும் சனி பகவான் சிவனை வணங்கி சாப விமோசனம் பெற்ற இடம் என்பதால், தஞ்சை அடுத்த திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சியின் போது, பரிஹார பூஜைகள் செய்யப்படுகிறது. நேற்று, சனிப்பெயர்ச்சியானதையொட்டி, இக்கோவிலில், அதிகாலை முதலே உல்ஸவ மூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் பரிஹார ஹோமம் ஆகியவை நடந்தது. இதில், மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, சனி பகவானை தரிசித்தனர். மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்குரியவர்கள் தோஷம் நீங்குவதற்காக, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளில் பங்கேற்றனர். பக்தர்கள் அனைவருக்கும், கோவில் நிர்வாகத்தின் சார்பில், பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், தஞ்சை பெரியக்கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், மேலவீதி கொங்கணேஸ்வரர் கோவில், மூலை அனுமார் கோவில், சங்கர நாராயணர் கோவில்களில் சனிப்பெயர்ச்சி பரிஹார பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.