பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கோவில்களில் நாளை அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. மார்கழி மாதம் மூல நட்சத்திரம், அமாவாசை திதியில் ஆஞ்சநேயர் அவதரித்தார். எனவே அந்நாளை மக்களால் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ராம பக்தரான ஆஞ்சநேயருக்கு அனைத்து ராமர் கோவில்கள், பெருமாள் கோவில்கள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள நா.மூ.,சுங்கம் அடுத்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில், இன்று மாலை முதலே சிறப்பு யாகங்கள் நடைபெற உள்ளன. தொடர்ந்து, நாளை காலை 5.00 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறும். காலை 9.00 மணிக்கு மேல், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். தொடர்ந்து காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அன்னதானமும் நடைபெறும். பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் காலை 10.30 மணிக்கு அபிேஷகம், அலங்காரம், தொடர்ந்து அனுமன் சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பிரகாரம் வலம் வருதல் நடக்க உள்ளன. கோவை ரோடு ஆச்சிப்பட்டி அனுமன் கோவில், நஞ்சேகவுண்வ்னபுதூர் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.