ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது அத்தியூத்து கிராமம். உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாதாதந்திர குங்கும அர்ச்சனை வழிபாட்டில் லலிதா சகஸ்ரநாமம், வறுமையை போக்கும் கனகதார ஸ்தோத்திரம், சக்திநாமாவளி, பகவத்கீதை, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் இருந்து ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை இந்த கிராமக்கோயிலில் நடைபெற்றுவருவது சிறப்புக்குரியதாகும். இதனை அழகன்குளம் அழகிய நாயகி மகளிர் மன்ற பொறுப்பாளர் பிரேமா குழுவினர் செய்துவருகின்றனர். முன்னதாக மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு மலர்அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் இவ்வழிபாட்டில் சுற்றுவட்டார கிராமத்தினர் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று செல்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தலைவர் தர்மராஜ் செய்திருந்தார்.