பதிவு செய்த நாள்
30
டிச
2014
12:12
திருவண்ணாமலை: ஆரணி அருகே, உழவாரப்பணியின் போது, கோவிலில் புதைந்திருந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. ஆரணி அடுத்த, காட்டேரி கிராமத்தில், பழமைவாய்ந்த குங்குமநாயகி சமேத அப்புநாதீஸ்வரர் கோவில் இருந்தது. இக்கோவில் காலப்போக்கில் சிதிலமடைந்து முற்றிலும் உடைந்து தரைமட்டமானது. கோவிலில் இருந்த மூலவர், குங்குமநாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் சிலையும் மண்ணில் புதைந்தன. காட்டேரி கிராமத்தில், குங்குமநாயகி சமேத அப்புநாதீஸ்வரர் கோவில் மண்ணில் புதைந்து வழிபாடு இல்லாமல் உள்ளது என்ற தகவலை அறிந்த, மகாதேவ உழவாரப்பணி சிவ தொண்டர்கள் நேற்று முன்தினம் காட்டேரி கிராமத்திற்கு வந்தனர். அவர்கள், கோவில் வளாகத்தில் மூலவர், அம்மன் பரிவார மூர்த்திகள் இருந்த இடத்தில் பல அடி ஆழம் தோண்டிய போது அங்கு சிவலிங்கம், குங்குமநாயகி அம்மன், முருகன் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மண்ணில் புதைந்திருந்த அம்மன், சிவலிங்கம், முருகன் சிலைகளை தோண்டி மேலே எடுத்தனர். பின் சிலைகளை கழுவி குங்குமம், மஞ்சள் பூசி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தகவல் அறிந்த ஊர் மக்கள், அங்கு திரண்டு ஸ்வாமியை வழிபட்டனர். முதல் கட்டமாக ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் சிலைகளை வைத்து வழிபடுவது எனவும், பிறகு, ஏற்கனவே சிவன் கோவிலில் இருந்த இடத்தில் புதியதாக குங்குமநாயகி சமேத அப்புநாதீஸ்வரர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது எனவும் ஊர்மக்கள் முடிவு செய்துள்ளனர்.