பதிவு செய்த நாள்
31
டிச
2014
02:12
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடக்கிறது. பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடக்கிறது. காலை 4:00 மணிக்கு மேல் 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.விழாவையொட்டி, இன்று முதல் 2ம் தேதி வரை, மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது. சொர்க்க வாசலில் கட்டுவதற்கு காய், கனிகள் மற்றும் திரவிய பொருட்களை, இன்று காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கோவிலில் வழங்குமாறு, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாட்டினை உதவி ஆணையர் கார்த்திக், செயல் அலுவலர் வெண்மணி ஆகியோர் செய்து வருகின்றனர். பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடைபெறுகிறது. விழாவையொட்டி, இன்று இரவு விஷ்ணு கான பஜனையும், நாளை அதிகாலை 3:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சமன், திருப்பாவை பாராயணம், காலை 5:00 மணிக்கு வைகுண்ட வாசல் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.இதுபோன்று ஜமீன் ஊத்துக்குளி கரிவரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடக்கிறது.