பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநிகோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சிரமத்தை தவிர்ப்பதற்காக சேதமடைந்த ரோடுகள் விரைவில் செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்தார்.நேற்று காலை பழநி போக்குவரத்து பணிமனைக்கு வந்த கலெக்டர், கோட்டமேலாளர், கிளைமேலாளர் மற்றும் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை, தொழிலாளர்கள் வருகை மற்றும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேப்பன்வலசு, கீரனூர் ஆகிய இடங்களிலிருந்து வந்த இரண்டு அரசுபஸ்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் சேதபடுத்தினர். இதில் வேப்பன்வலசு பஸ் டிரைவர் அண்ணா தொழிற்சங்க தலைவர் வரதராஜன் காயமடைந்தார். பஸ்களை சேதபடுத்தியவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"மாவட்டம் முழுவதும் பஸ்கள் இயங்குகிறது. பழநியில் பஸ்சை சேதபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 15 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர், மதுரையிலிருந்து பஸ்கள் இயக்கம் குறைவாக உள்ளதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூல்செய்யும் தனியார்பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பழநியில் இரவு 10 மணிக்குமேல் மதுவிற்பனையை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதயாத்திரை பக்தர்களுக்காக சேதமடைந்துள்ள ரோடுகளை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.