பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஜன.,4 ல் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.இக்கோயிலில் மாணிக்க வாசக சுவாமிக்கு ஆருத்ரா தரிசன விழாவின் துவக்கமாக காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து ஜன., 4 வரை மாணிக்கவாசகர் ஆடிவீதி உலாவும், இரவு திருவெம்பாவை வாசித்தலுடன், தீபாராதனையும் நடக்கும். இரவு 7 மணிக்கு உற்சவர் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி புறப்பாடுடன், கோயில் கொடிமரம் முன் ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.மறுநாள் அதிகாலை 3 மணிக்கு மேல் சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடக்கவுள்ளது. காலை 6 மணிக்கு மகா தீபாராதனையுடன், உற்சவர் நடராஜர் மற்றும் மாணிக்கவாசகர் புஷ்ப விமானங்களில் திருவீதியுலா வருகிறார். இரவு 7 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில், விசாலாட்சி அம்பிகா சமேத சந்த்ரசேகர சுவாமி ரிஷப வாகனத்தில், பஞ்சமூர்த்திகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.