பதிவு செய்த நாள்
31
டிச
2014
02:12
திருச்செங்கோடு : திருச்செங்கோடு அக்ரஹாரம் வீதியில் அமைந்துள்ள சஞ்சீவராய பெருமாள் கோவிலில், ஹனுமந் ஜெயந்தி மஹோத்சவம் விழாவை முன்னிட்டு, சென்னை ஆர்.பி.வி.எஸ். மணியனின், மஹாபாரத தொடர் சொற்பொழிவு நடக்கிறது. ஆர்.பி.வி.எஸ். மணியன் சொற்பொழிவில் கூறியதாவது: திரவுபதி சபைக்கு இழுத்து வரப்பட்டபோது, அந்த சபையில் இருந்த அனைவருக்கும் அந்த காட்சி அதிர்ச்சி தருவதாகவும், காண சகிக்க முடியாததாகவும் இருந்தது. அவையோரிடத்தில் நீதி கேட்டாள் திரவுபதி. பரதவம்சத்து தர்மமும், சத்ரியர்களுடன் ஒழுக்கமும் அழிந்தபோய் விட்டனவா. இங்கு நடக்கும் அக்கிரமத்தை எப்படி எல்லோரும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மகாத்மாக்கள் என்று மக்கள் போற்றும் துரோணர், பீஷ்மர், விதுரர் ஆகியோர் இருக்கும் சபையில் இந்த அட்டூழியம் நடக்கலாமா. ஆடுவது சூதாட்டம்; அதிலும் வரைமுறை கிடையாதா.தன்னையே பணயம் வைத்து தோற்ற தர்மனுக்கு, தன்னை இழந்தபின், என்னை பணயமாக வைக்க ஏது உரிமை. இந்த கேள்விக்கு பீஷ்மர் பதில் கூறும்போது, தன் சுதந்திரத்தை இழந்தவனாக தர்மர் இருந்த நிலையில், உன்னை தனக்கு கட்டுப்பட்டவள் எனக்கருதியே பணயமாக வைத்து இழந்துள்ளான்.
மனைவி, கணவனுக்கு எல்லா நிலையிலும் கட்டுப்பட்டவள் என நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருபுறம் தன் சுதந்திரத்தை இழந்தபின், வேறு ஒன்றையும் பணயம் வைக்க அறுகதையற்றவன் என்ற நியதி. இன்னொரு புறம் கணவன் அடிமையான பிறகும் மனைவியை அடகு வைக்க உரிமை உண்டு என்ற சாஸ்திர விதிமுறை. இப்பிரச்னைக்கு சரியான தீர்வு என்ன என்று, என்னால் சொல்ல முடியவில்லை. காரணம், தர்மம் மிகவும் சூட்சுமமானது என்றார். அப்போது துரியோதனனின் தம்பிகளில் இளையவனான விகர்ணன், திரவுபதி பாண்டவர்கள் ஐவருக்கும் உரியவள். அப்படியிருக்க, அவளை சூதில் பந்தயமாக வைத்து ஆட, யுதிஷ்டிரருக்கு தனிப்பட்ட உரிமை ஏது.அதுவுமின்றி, தன்னைத் தோற்றப்பின் தருமருக்கு, தன் மனைவியை தோற்றும் உரிமம் ஏது. இங்கு எதிர் ஆட்டக்காரனான சகுனிதான், திரவுபதியின் பெயரை கூறி அவளை வைத்து ஆடுமாறு தருமபுத்திரருக்கு கூறினான். அதுவும் தவறு. விகர்ணனின் பேச்சை கர்ணன் கண்டித்தான்.இவ்வாறு அவர் பேசினார்.