பதிவு செய்த நாள்
31
டிச
2014
02:12
குமாரபாளையம் : குமாரபாளையம்-பள்ளிபாளையம் சாலை, ஐயப்பன் நகரில், 12 ஆயிரத்து, 19 சதுரஅடி பரப்பில், தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ளதுபோல், இக்கோவில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் மூலவராக தர்மசாஸ்தா ஐயப்பன், கன்னிமூல கணபதி, நாகராஜபிரபு, பாலமுருகன், மஞ்சமாதா, சிவலிங்கம், ராமர், நவக்கிரகங்கள், ஆஞ்சநேயர், கடுத்தசாமி, கருப்புசாமி ஆகிய ஸ்வாமிகள் அனைத்தும் பஞ்சலோக சிலைகளாக அமைக்கப்பட உள்ளது.மேலும், கீழ்தளத்தில் அன்னதான கூடம், சமையல் கூடம், இருப்பு அறை, தியான மண்டபம், அர்ச்சகர் தங்கும் அறை, அலுவலகம், விருந்தினர் தங்கும் அறை ஆகியவை அமைக்கப்படுகிறது. ஆண்கள், பெண்களுக்கான குளியல் அறை மற்றும் கழிப்பறைகள் கட்டப்படுகிறது.
இக்கோவிலில், 18 படிகளை கடந்து மேல் தளத்துக்கு சென்றால், அங்கு முன்புறம் கொடிமரம், பலி பீடம், மகா மண்டபம், தர்மசாஸ்தா ஐயப்பன் கருவறை, கன்னிமூல கணபதி, நாகராஜபிரபு கோவிலும், அதை தொடர்ந்து, பாலமுருகன், மஞ்சமாதா, ஆஞ்சநேயர், மணி மண்டபம் ஆகியவை அமைக்கப்படுகிறது.மேலும், ஸ்வாமிகளின் மடப்பள்ளி, கலச பூஜைகளுக்கான மண்டபம், ஸ்வாமியின் பூஜை பொருள் வைப்பு அறையும் அமைக்கப்படுகிறது. இக்கோவிலை உருவாக்கி வரும் குருசாமியான ஈஸ்வரன், தனது, 14வது வயதில் இருந்து, 47 ஆண்டுகளாக சபரிமலை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, இக்கோவில் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் போல் அமைக்கப்படுகிறது. கடந்த சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலுக்கு பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. வரும் தை மாதத்தில் பணிகள் முழுமையாகும் என்றார்.மேலும் தொடர்புக்கு, ஆர்.கே.ஏ., ஈஸ்வரகுருசாமி, தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோவில், ஐயப்பன் நகர் (கிழக்கு எம்.ஜி.ஆர்., நகர்), குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து, குமாரபாளையம் என்ற முகவரியிலும், 93618 33244, 93456 51368, 93666 40111 என்ற மொபைல் ஃபோனில் தொடர்பு கொள்ளலாம்.