பதிவு செய்த நாள்
01
ஜன
2015
12:01
வேலூர்:கடந்த, 140 ஆண்டுகளுக்கு முன் மாயமான அம்மன் சிலை, ஏரியில் இருந்து மீட்கப்பட்டது.வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 160 ஆண்டுகள் பழமையான, சாமூண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.இங்கு, 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து, பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடத்துவது வழக்கம். திருவிழா முடிந்ததும், அம்மன் சிலையை கோவிலில் உள்ள ஒரு அறையில், பாதுகாப்பாக வைத்திருப்பர். 140 ஆண்டுகளுக்கு முன், அம்மன் சிலை ஒன்று மாயமானது.அப்போதைய கோவில் பூசாரி முல்லை வேந்தன், அப்போதைய சப் - கலெக்டராக இருந்த ஜான் வின்சன் பாலிடம், இதுகுறித்து புகார் செய்தார். இந்த விஷயம், கோவில் மானிய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.நேற்று, பெரியாங்குப்பம் ஏரிக்கரையில், தேசிய ஊரக வேலை திட்டத்தில், 50 பெண்கள் பணியாற்றி வந்தனர். அப்போது சரஸ்வதி என்ற பெண், ஏரியில் மண் வெட்டிய போது, வித்தியாசமான சத்தம் கேட்டது. இதையடுத்து, அங்கிருந்த பெண்கள், அந்த இடத்தை தோண்டிய போது, கல்லிலான அம்மன் சிலை ஒன்று இருந்தது தெரியவந்தது.தகவல் அறிந்த சாமூண்டீஸ்வரி கோவில் பூஜாரி சடையாண்டி, 140 ஆண்டுக்கு முன் கோவிலில் திருடுபோன அம்மன் சிலை இதுதான் என அடையாளம் காண்பித்தார்.இதையடுத்து, அந்த சிலையை, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கோவில் அருகில் உள்ள ஆல மரத்தின் கீழ் வைத்து வழிபட்டனர். ஆம்பூர் தாசில்தார் சரஸ்வதி, சிலையை கைப்பற்றினர்.அதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ""பூமிக்குள் கிடைக்கும் சிலைகள், புதையல் அரசாங்கத்தின் சொத்து. உங்களுக்கு உரிமை கிடையாது. இந்த கோவிலுக்கு சொந்தமான சிலை என்பதை நிரூபித்து விட்டு சிலையை எடுத்துச் செல்லலாம், என்று, தாசில்தார் சரஸ்வதி கூறினார்.பின்னர், சிலையை ஆய்வுக்காக தொல் பொருள் ஆய்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.