பதிவு செய்த நாள்
02
ஜன
2015
10:01
திருச்சி:வருண பகவான் வரவேற்க, பக்தர்களின் ரங்கா ரங்கா கோஷத்துக்கிடையே, ரத்தின அங்கி அலங்காரத்தில் நம்பெருமாள், சொர்க்க வாசலை கடந்து, ஆயிரங்கால் மண்டபத்திற்கு சென்று, பக்தர்களுக்கு சேவை ஸாதித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள், 16 மணி நேரம் வரை காத்திருந்து, நம்பெருமாளை தரிசித்து சென்றனர்.
பூலோகத்தில், 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் ரங்கம் ரங்கநாதர் கோவிலில், மார்கழி மாதத்தில், 20 நாள் நடக்கும், வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது.வைகுண்ட ஏகாதசி விழாவின், பகல் பத்து உற்சவம் கடந்த மாதம், 22ம் தேதி துவங்கியது. பகல் பத்தின் நிறைவு நாளான நேற்று அதிகாலை, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாளை தரிசனம் செய்ய, நேற்று முன்தினம் மதியம் முதலே, ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் குவியத் துவங்கினர்.
அதிகாலை, 2 மணி முதல், மூலஸ்தானத்தில் ரத்தின அங்கி அலங்காரத்தில் இருந்த நம்பெருமாளுக்கு, ஸ்ரீரங்கம் ஜீயர், பட்டாச்சாரியர்கள், ஆகமவிதிகளின் படி, பூஜைகளை மேற்கொண்டனர். அதிகாலை, 3.45 மணிக்கு விருச்சிக லக்னத்தில், நம்பெருமாள் மூலஸ்தானத்தல் இருந்து புறப்பட்டார்.
நாழிக்கொட்டான் வாசல், பிரகாரத்தை வலம் வந்து, பிரஜாநதியில் வேத வின்னலை பெற்று, 4.45 மணிக்கு, சொர்க்க வாசல் அருகே வந்தார். சரியாக, 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் ரங்கா ரங்கா கோஷங்கள் முழங்க, நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து, ஆயிரங்கால் மண்டபத்துக்கு சென்றார்.
அதிகாலை, 5.15 மணிக்கு, திருக்கொட்டகை பிரவேசம், பின்னர் அங்கிருந்து காலை, 6.30 சாதரா மரியாதையும் பெற்று, காலை, 7.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தை அடைந்தார். நேற்று இரவு, 12 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள், திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை, 1.15 மணிக்கு, மூலஸ்தானத்தை அடைந்தார்.அதிகாலை, 4 மணி முதல், இரவு மீண்டும் மூலஸ்தானதுக்கு சுவாமி புறப்பட்டு செல்லும் வரை,
பல லட்சம் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள், 16 மணி நேரம் வரை காத்திருந்து, நம்பெருமாளை தரிசித்து சென்றனர்.