பதிவு செய்த நாள்
02
ஜன
2015
10:01
திருப்பூர் : வைகுண்ட ஏகாதசி விழா, திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், திருப்பூர் திருப்பதி கோவிலில் நேற்று சிறப்பாக நடந்தது; நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் : கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவங்கள் நடந்து வந்தன. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க, எம்பெருமானுக்கு திருமஞ்சனம் நடந்தது. பால், தயிர், தேன், இளநீர், பழங்கள் என பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடந்தது.5:00 மணிக்கு, பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது; எம்பெருமானிடம் இருந்து சாவி பெற்று, பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கருட வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய எம்பெருமான், சொர்க்கவாசல் வழியாக வந்து, எதிரே இருந்த நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார். கூடியிருந்த பக்தர்கள், கோவிந்தா கோபாலா என கோஷம் எழுப்பினர். அதன்பின், சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். 11:00 மணி வரை, சொர்க்க வாசலிலும், பிறகு கொடி மரம் அருகிலும் காட்சியளித்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கோவிலுக்கு பக்தர்கள் வரத்துவங்கினர்; நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் வழியாக வந்த பக்தர்களுக்கு, ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் லட்டு, பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில் கேசரி மற்றும் அவல் பிரசாதம் வழங்கப்பட்டது. தங்க அங்கி அலங்காரத்தில், ஸ்ரீவீரராகவப் பெருமாளும், தாயார்களும் அருள்பாலித்தனர். பூக்கள், பழங்கள், காய்கறிகளால் சொர்க்கவாசல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
திருப்பூர் திருப்பதி கோவில்: திருப்பூர் திருப்பதி ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலை 2:00 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. 3:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீபூமிநீளா, ஸ்ரீகோதாதேவி அலமேலு மங்கை தாயார்களுடன், ஸ்ரீவேங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி, நம்மாழ்வாருக்கு எதிர்சேவை சாதித்தார். தொடர்ந்து, பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து, எம்பெருமானை தரிசித்தனர். வீதி உலா முடிந்து, சிறப்பு அரங்கில் தாயார்களுடன், வேங்கடேச பெருமாள் அருள்பாலித்தார். பச்சை பந்தல் மற்றும் பூப்பந்தலால் சொர்க்க வாசல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அவிநாசி: அவிநாசியில் உள்ள பூமி நீளாதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை, கரிவரதராஜருக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் ஆகியன நடைபெற்றது. அதன்பின், அனுமந்தராய வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பரமபதவாசல் வழியே எழுந்தருளி சேவை சாதித்தார். திரண்டிருந்த பக்தர்கள், கோவிந்தா... கோபாலா என கோஷமிட்டனர். அதன்பின், சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.இதேபோல், மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோவில், தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், கருவலூர் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில், காசிகவுண்டம்புதூர் பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.