உடுப்பியில் குழந்தைவடிவில் கண்ணன், யதுகுல பாலகனாக அருள்கோலம் கொண்டு சேவை சாதிக்கிறார். கோகுலத்தில் ஆய்ச்சியர் மத்தினால் தயிர் கடையும் போது எழும் ஓசை கேட்டு துயில் எழும் கண்ணன். இங்கு தானே வலக்கையில் தயிர் கடையும் மத்தும், இடக்கையில் வெண்ணெய் ஏந்தியும் காட்சி தருகிறார். இம்மூர்த்தி ருக்மணியால் பூஜிக்கப்பட்டவர். ருக்மணி பாலகனான குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்று ஆசை கொண்டாள். அதனால் தேவலோகசிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரஹத்தைச் செய்வித்து பூஜித்தாள். அவ்விக்ரஹமே <உடுப்பியில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. இவர் மத்துவ சித்தாந்தம் போதித்த மத்வாச்சாரியாராலும் பலகாலம் பூஜிக்கப் பெற்றமூர்த்தி ஆவார். மத்துவரால் பாடப்பட்ட கீர்த்தனைப் பாடல்கள் இக்கோயிலில் இன்னும் பாடப்படுவது சிறப்பாகும். உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்கு வாசல் கதவுகள் இல்லை. ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழிமட்டுமே உண்டு. கர்ப்பகிரகத்தின் நுழைவுவாயில் விஜயதசமியன்று மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் சன்னதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக மட்டுமே கண்ணனைத் தரிசிக்க வேண்டும்.