பதிவு செய்த நாள்
03
ஜன
2015
11:01
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்றுமுன் தினம் நள்ளிரவில் பரமபதவாசல் திறக்கப்பட்டு, இரவுப் பத்து உற்சவம் துவங்கியது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, டிச.21 ல் பகல் பத்து உற்சவம் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை,பின்னர் கோயில் கால பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு சவுமியநாராயணப்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் பெருமாள் தரிசனம் செய்தனர்.இரவு 9 மணிக்கு பெருமாள் ராஜாங்க திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து, இரவு 11 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் தாயார், ஆண்டாள் சன்னதிகளில் எழுந்தருளி தேவியர்களுக்கு அருள்பாலித்தார்.நள்ளிரவு 12.10 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலைக்கடந்து நம்மாழ்வாருக்கு பெருமாள் காட்சியளித்தார். அடுத்து ஏகாதசி மண்டபத்தில் பர்த்தி உலாத்துதல் நடந்தது. திரளாக பக்தர்கள் கூடி பரமபத வாசல் திறப்பை தரிசித்தனர். தொடர்ந்து பெருமாள் தாயார் சன்னதிஎழுந்தருளி சிறப்பு பூஜை,ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு பத்து உற்சவம் துவங்கியது.நேற்று முதல், தினசரி இரவு 7 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படும். ஜன.,8ல் திருமங்கையாழ்வாருக்கு காட்சி அளித்தல், திருவீதி உலா நடைபெறும். ஜன.,10ல் காலை 10 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, நம்மாழ் வார் திருவடி தொழுதல் நடைபெறும். ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான நிர்வாகத்தினர் செய்தனர்.