பதிவு செய்த நாள்
06
ஜன
2015
11:01
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில்உள்ள சிவாலயங்களில், ஆருத்ரா தரிசன விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தேன், நெய், பழ வகைகள், பால், தயிர், நெய், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் காட்சியளித்தார். நடராஜர், சிவகாமியம்மனுடன் சப்பரத்தில் எழுந்தருளி, பட்டி சுற்றுதல் மற்றும் தேரோடும் வீதிகளில் உலா வந்து அருள்புரிந்தார்.
* நல்லூர் விசாலாட்சியம்மன் உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில், நேற்று காலை 5:00 மணிக்கு, மகா அபிஷேகம் நடந்தது. பின், அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜருக்கு, சோட உபசாரம் எனப்படும் பரதம், வீணை, மிருதங்கம், வாய்ப்பாட்டு என 16 வகை கலை நிகழ்ச்சிகளுடன் மகா தீபாராதனை நடந்தது. ஆயிர வைசியர் சமூகம் சார்பில், உற்சவருக்கு ஏலக்காய், முந்திரி, திராட்சை மாலைகள் அணிவிக்கப்பட்டன.
* எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6:00 மணிக்கு, மகா அபிஷேகம் நடைபெற்றது. பின், 18 வகை திரவியங்களில் நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜர், பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 10:30 மணிக்கு, திருக்கல்யாணம் நடைபெற்றது.
* அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலிலும், ஆருத்ரா மகா தரிசன விழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நடராஜர், சிவகாமி அம்மைக்கு விபூதி, அன்னம், சந்தனம், சொர்ணம், பால், தயிர், நெய் உள்ளிட்ட 32 வகை பொருட்களில், அபிஷேகம் செய்யப்பட்டது. வேத பாராயணங்கள், திருமுறை முழங்க, சிறப்பு பூஜை நடைபெற்றது.அதன்பின், ஆடல் வல்லானும், சிவகாமி அம்மையும், பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சப்பரத்தில் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டு, கோவில் முன்புள்ள அரச மரத்தில் பட்டி சுற்றப்பட்டு, நான்கு ரத வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் மற்றும் காடாம்பாடி ஐநூற்று கொங்கு செட்டிமார் தர்ம பரிபாலன சபையினர் செய்திருந்தனர்.
* சேவூரில் உள்ள வாலீஸ்வரர் கோவிலில், நடராஜ பெருமான், சிவகாமியம்மைக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, சிறப்பு மலர்களால் அலங்கரித்து, தீபாராதனை நடைபெற்றது. அதன்பின், சுவாமி வீதியுலா நடந்தது. கொ.ம.தே.க., மற்றும் கொங்கு வேளாள கவுண்டர் பேரவை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றிய தலைவர் நடராஜன் துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் மணி, பொருளாளர் பழனிசாமி, விவசாய அணி செயலாளர் குழந்தையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலில், அபிஷேகம், சிறப்பு பூஜை, சுவாமி வீதியுலா நடைபெற்றது. பூண்டி, திருப்பூர் பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் பங்கேற்று, சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், தொரவலூர், அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன விழா, விமர்சையாக நடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.