பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
11:06
சிவகங்கை : நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். 7ம் நாள் தங்க ரதம், 8ம் நாள் வெள்ளி ரத புறப்பாடு நடந்தது. 9ம் நாளான நேற்று காலை 10.15 மணிக்கு, தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10.50 மணிக்கு தேரோட்டம் துவங்கி, நான்கு ரத வீதியையும் சுற்றி, பகல் 12 மணிக்கு நிலையை அடைந்தது. கோயில் பிரகாரத்தில் மாவிளக்கு, நெய்விளக்கு ஏற்றி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்தி செலுத்தினர். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, தன்னார்வ அமைப்புகள், வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் அன்னதானம், நீர் மோர், சர்பத் வழங்கினர். 10ம் நாளான இன்று பால்குடம், பூக்குழி வைபவமும்; இரவு பூப்பல்லக்கும் நடக்கும்.11ம் நாளான நாளை வெள்ளி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா முடிகிறது. சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் சின்னராதா ஏற்பாட்டை செய்தனர். நாட்டரசன்கோட்டை பேரூராட்சி தலைவர் முருகானந்தம், துணை தலைவர் கே.ஆர்., சுப்பிரமணியன், செயல் அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள், அகில பாரத ஐயப்பா சேவா சங்க மாவட்ட தலைவர் கருப்பையா, தொண்டர் படை தளபதி பிரபாகரன், சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி தாளாளர் காசி, தலைமை ஆசிரியர் மாறன் பங்கேற்றனர்.