பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
11:06
ராசிபுரம்: கின்னஸ் சாதனைக்காக, 25 ஆயிரம் ருத்ராட்சைகளைக் கொண்டு, ருத்ராட்ச சிவ சிம்மாசனத்தை உருவாக்கி, ராசிபுரத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அது, கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் அடுத்த மசக்காளிப்பட்டியில், சிவசக்தி பீடம் உள்ளது. அதை, மேகநாதன் நிர்வகித்து வருகிறார். கடந்த 1990ம் ஆண்டு முதல் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட அவர், ஆன்மிக சரித்திரத்தில் இடம் பெறும் வகையிலும், மக்களுக்கு பயனுள்ள வகையிலும் ஏதேனும் சாதனை புரிய வேண்டும் என்பது, இவரது நீண்ட நாள் கனவு. இதையடுத்து, ருத்ராட்சைகளை வைத்து சிவ சிம்மாசனம் செய்ய வேண்டும் என முடிவு செய்து, அதற்கான முயற்சியில் இறங்கினார். தொடர்ந்து, 25 ஆயிரம் ருத்ராட்சத்தில் சிவ சிம்மாசனம் செய்ய, ருத்ராட்சை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
முதற்கட்டமாக, தேக்கு மரப்பலகை கொண்டு சிம்மாசனத்தை தயார் செய்தார். அதில், ஒரு முகம் முதல், 23 முகம் வரை அரிதாகக் கிடைக்கக் கூடிய, 25 ஆயிரம் ருத்ராட்சைகளை ஒட்டி, சிவ சிம்மாசனத்தை தயார் செய்தார். அந்த ருத்ராட்சைகளோடு நவரத்தின கற்கள், நவரத்தின மாலை, படிக மாலை, ரசமணி மாலைகள், மூலிகைகள், எந்திரங்கள், சிறு சிறு பவள விநாயகர், சிவ பார்வதி, மதுரை மீனாட்சி, சப்த கன்னிமார், கோமேதகத்தால் ஆன நாகலிங்கம், சிவபெருமானின் ஆயுதங்களான சூலம், உடுக்கை, பிரம்பு, ஓலைச்சுவடி, இடை கைத்தடி, தண்டம், செம்பு என, ஏராளமானவற்றை தேக்கு மரத்தில் பதித்து, இந்த சிவ சிம்மாசனத்தை உருவாக்கியுள்ளார். மேலும், சிவ சிம்மாசனத்தின் மீது சிவலிங்கத்தை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார். இதுகுறித்து மேகநாதன் கூறியதாவது: என்னுடைய நீண்ட நாள் கனவான இந்த சிவ சிம்மாசனத்தை உருவாக்குவதுக்கு நான்கு மாதங்கள் ஆனது. என்னிடம் ஏற்கனவே, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ருத்ராட்சைகள் இருந்தன. மேலும், பல்வேறு ஆன்மிக தலங்களில் இருந்து ருத்ராட்சைகளை சேகரித்து இந்த சிவ சிம்மாசனத்தை உருவாக்கியுள்ளேன். அதை, கின்னஸ் சாதனைக்கு அனுப்ப உள்ளேன். இந்த சிவ சிம்மாசனத்தை மூன்று முறை சுற்றி வருவதன் மூலம், திருமணத் தடைகள், புத்திர தோஷங்கள், முன்னோர் சாபங்கள் மற்றும் நாக தோஷங்கள் நீங்கும். இவ்வாறு மேகநாதன் கூறினார். இந்த சிவ சிம்மாசனம் முதன் முதலாக, இன்றும் (ஜூன் 14), நாளையும் திருச்செங்கோடு விஸ்வகர்மா மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுகிறது.