பதிவு செய்த நாள்
09
ஜன
2015
10:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட உற்சவம் நேற்று துவங்கியது. இக் கோயிலில் மார்கழி பகல் பத்து உற்சவம் கடந்த 22ம்தேதி துவங்கி 31ம் தேதி வரை நடந்தது. ஜன.1ம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. அன்று முதல் துவங்கிய ராப்பத்து உற்சவம்11ம் தேதி வரை நடக்கிறது.
மார்கழி மாத எண்ணெய்க்காப்பு உற்சவம் நேற்று முதல் துவங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி காலையில் ஆண்டாள் தங்கபல்லக்கில் எழுந்தருளி வீதி மாடவீதிகளில் எழுந்தருளி கோபுர வாசலில் போர்வை படி களைதல் நிகழ்ச்சியும் திருவடி விளக்கம், தொடர்ந்து எண்ணெய்க்காப்பு மண்டபம் சேருதல் நடந்தது. மாலை 3 மணிக்கு ஆண்டாளுக்கு எண்ணெய்க் காப்பு சேவை, நீராட்ட தொட்டிக்கு எழுந்தருளல், திருமஞ்சனம் நடந்தது. இரவு ஆண்டாள் துளசி வாகனத்தில் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் ஆண்டாள் கள்ளழகர், கண்ணன், முத்தங்கிசேவை போன்ற கோலங்களில் அருள் பாலிக்கிறார். ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா நிர்வாகிகள் செய்துள்ளனர்.