அவிநாசி : அவிநாசி அருகே கணியாம்பூண்டியில் உள்ள கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கணியாம்பூண்டி கரியகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகளானதையொட்டி, திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபி ஷேக விழா, கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை யாக பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை நடந்தது. பூஜிக்கப்பட்ட கலசங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் சன்னதிகளில் கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கரிய காளியம்மனுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டியினர் மற்றும் கணியாம்பூண்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.