வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு ரூ.23 லட்சத்தில் தங்க கிரீடம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2011 12:06
ஸ்ரீபெரும்புதூர் : வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, 23 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க கிரீடத்தை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வழங்கினார். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ரவிசங்கர். தொழிலதிபர். வல்லக்கோட்டை முருக பக்தரான இவர், தனது தொழில் வளர்ச்சியடைந்ததால், நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் முருகனுக்கு தங்க கிரீடம் காணிக்கையாக வழங்க முடிவு செய்தார். இதையடுத்து, ரவிசங்கர் நேற்று முன்தினம் ஒரு கிலோ 90 கிராம் எடையுள்ள தங்க கிரீடத்தை, முருகன் கோவில் செயல் அலுவலர் வேதமூர்த்தியிடம் வழங்கினார். ஒன்றேகால் அடி உயரமுள்ள கிரீடத்தின் மதிப்பு 23 லட்சம். நேற்று சுவாமிக்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. ஆடி கிருத்திகை, ஆங்கில, தமிழ் வருடப் பிறப்பு நாட்களில் முருகப் பெருமானுக்கு இந்த தங்க கிரீடம் அணிவிக்கப்படும் என, செயல் அலுவலர் வேதமூர்த்தி தெரிவித்தார்.