பதிவு செய்த நாள்
09
ஜன
2015
12:01
வத்தலக்குண்டு: சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காமல் புகையில்லா பொங்கல் கொண்டாட அரசு வழிமுறைகளை வகுத்துள்ளது. போகிப் பண்டிகையை முன்னிட்டு வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளில் பயன்பாட்டில் இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள், சாக்கு பைகள் உட்பட இதர கழிவுப் பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. எனவே பொருட்களை எரிக்காமல் மாற்று வழியில் அப்புறப்படுத்த பேரூராட்சிகளுக்கு அரசு வழிகாட்டி உள்ளது. பேரூராட்சி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது: பொதுமக்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம், பேச்சுபோட்டி நடத்த வேண்டும். துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வீடு வீடாக நோட்டீஸ் வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள் மூலம் ஒருங்கிணைந்த துப்புரவு பணி, மனித சங்கிலி நடத்துதல், நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும். "எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலம் புகையில்லா பொங்கல் செய்தியை விளம்பரபடுத்த வேண்டும். வீடு, கடைகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரித்து பிறருக்கு வழங்கலாம். அபாயகர கழிவுகளான டியூப்லைட்டுகள், காலாவதியான மருந்துகளை பொது இடங்களில் கொட்டாதவாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மறுசுழற்சி செய்ய இயலாத பொருட்களை பள்ளி, கல்லூரிகளில் உள்ள பசுமை இயக்கம் மூலம் விற்பனை செய்ய வேண்டும், இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.