பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
12:06
திருமழிசை : ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கருட சேவை உற்சவம் நடந்தது.திருவள்ளூர் அருகே திருமழிசையில், ஜெகந்நாத பெருமாள் மற்றும் ஆழ்வார் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆனி பிரம்மோற்சவ விழா 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டது. பின், தங்க தோளுக்கினியான் வாகனத்தில் மூலவர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடர்ந்து, நேற்று காலை கருட சேவை உற்சவம் நடைபெற்றது. மாலையில் அனுமந்த வாகனத்தில் பெருமாள் வீதியுலா வந்தார். இதில் திருமழிசை, மடவிளாக்கம், பிராயம்பத்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர். தொடர்ந்து இன்று சந்திரபிரபை உற்சவமும், நாளை மோகினி, சிம்ம வாகனத்தில் மூலவர் வீதியுலா, 16ம் தேதி சூர்ணாபிஷேகமும் நடைபெறும். இதை தொடர்ந்து, 17ம் தேதி திருத்தேர் உற்சவமும், 18ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் வேடுபறி உற்சவமும் நடைபெற உள்ளது. 19ம் தேதி ஏழூர் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி உற்சவத்துடன் கொடியிறக்கப்படும். 20ம் தேதி ஸ்ரீபுஷ்பயாகம், ஸப்தாவரணத்துடன் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும்.