பதிவு செய்த நாள்
10
ஜன
2015
10:01
மேட்டுப்பாளையம்: உலக சமாதானம் அடையவும், இயற்கை சீற்றத்திலிருந்து மக்களைக் காக்கவும், கல்லாறு அகத்தியர் ஞான பீடத்தில், 108 சர்வதோஷ நிவாரண மகாயாகம் நடந்தது. மேட்டுப்பாளையம் - ஊட்டி மெயின் ரோடு கல்லாறு துாரிப்பாலம் அருகேவுள்ள, அகத்தியர் ஞான பீடத் திருக்கோவிலில், அகத்தியர் குருபூஜை விழா நடந்தது. காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. உலக சமாதானம் அடையவும், இயற்கை சீற்றத்திலிருந்து மக்களைக் காக்கவும், ஞானபீட தவயோகி தங்கராசன் அடிகளார், மாபெரும் 108 சர்வதோஷ நிவாரண மகாயாகத்தை நடத்தினார். குண்டத்தில் ஆயிரக்கணக்கான அரிய மூலிகை பொருட்கள் போட்டு, யாகம் வளர்க்கப்பட்டது. இதில் கோடையிடி முத்துக்கிருஷ்ணன், சிவாச்சாரியார்கள், மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் சதீஸ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ராமன் கடவுள் வாழ்த்து பாடினார். நந்தி ஆஷ்ரம குழுவினரின் பக்தி இன்னிசை, மஞ்சுஸ்ரீயின் பரத நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாதாஜி சரோஜினி அம்மையார் நன்றி கூறினார்.