பதிவு செய்த நாள்
10
ஜன
2015
11:01
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே, இளையாத்தங்குடி பெரு மாள் கோவிலில், இரண்டு சுவாமி சிலைகள், தங்கம், வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே, இளையாத்தங்குடியில், ஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, கோவில் குருக்கள் சீனிவாசன் நடையை சாத்தி விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, கோவிலை திறந்து, குருக்கள் மூலஸ்தானத்திற்கு சென்றுள்ளார். அங்கு, பெருமாள் அணிந்திருக்கும் பாசிமாலை, காலில் தட்டுப்பட்டதை உணர்ந்த குருக்கள், வெளியே சென்று, மீண்டும், காவலரை அழைத்து வந்துள்ளார்.
இருவரும், ‘டார்ச்லைட்’வுடன் உள்ளே சென்றுள்ளனர். அங்கு, மூலஸ்தானத்திற்குள் இருந்த, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் சிலைகளை காணவில்லை. கோவில் நிலவறையில், கற்கதவுகளைத் திறந்து, பெட்டியில் இருந்த, அனுமனுக்குரிய வெள்ளி அங்கியையும் திருடிச் சென்றுள்ளனர்; பெட்டகத்தை திறக்க முடியாமல் விட்டுச் சென்றுள்ளனர். மேலும், சக்கரத்தாழ்வார் சக்கரம், ௨, திருமாங்கல்யம், ௨, பொட்டு, வெள்ளி தீர்த்தக் கிண்ணம், கரண்டி, 2 கும்பங்கள், 2 கடாரி ஆகியவை, திருட்டு போனது தெரிய வந்தது. திருட வந்தவர்கள் கொண்டு வந்த, ‘டூப்ளிகேட்’ சாவிக் கொத்தை விட்டுச் சென்றுள்ளனர். புகாரையடுத்து, மோப்ப நாய் ‘லிங்கா’ வரவழைக்கப்பட்டது. மோப்பநாய், கோவிலில் இருந்து ஓடி, ஒரு தோட்டத்தின் வழியாக சென்று நின்றது; போலீசார் விசாரிக்கின்றனர்.