பதிவு செய்த நாள்
15
ஜூன்
2011
11:06
நகரி :சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று மாலை 6 மணி முதல், நாளை அதிகாலை 4.30 மணி வரை, நடை சாத்தப்படும் என, தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்தார். இன்று மாலை 4 மணி முதல், பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு செல்வது நிறுத்தப்படுவதால் , கோவிலில் பக்தர்களின் துரித தரிசன வசதிக்காக, இன்று காலை முதல் மாலை 4 மணி வரை, தொலை தூர தரிசனம் அமல்படுத்தப்படும். அதே போல் குறிப்பிட்ட நேரத்தை விட, ஒரு மணி நேரம் முன்பாக, சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகள் தொடங்கப்படும். நித்ய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் சேவைகள் வியாழனன்று ரத்து செய்யப்படுகிறது. 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்றுள்ள பக்தர்களை, இன்று காலை 11.30 மணி வரையிலும், 50 ரூபாய் டிக்கெட் பெற்றுள்ள பக்தர்கள் பிற்பகல் 2 மணி வரையும் அனுமதிக்கப்படுவர் என, தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.இன்று வைகுண்டம் இரண்டாவது வளாகத்தில், இலவச சாமி தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு, பகல் 11.30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.