பதிவு செய்த நாள்
17
ஜன
2015
02:01
திருத்தணி: மாட்டு பொங்கல் திருவிழாவை ஒட்டி, திருத்தணி அருகே தீப்பாஞ்சியம்மன் கோவிலில், 10 கிராமங்களில், 1,000 குடும்பத்தினர் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருத்தணி நகராட்சி முருகூர் அருகே உள்ளது தீப்பாஞ்சியம்மன் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும், மாட்டு பொங்கல் தினத்தன்று, திருத்தணி, அகூர், பாண்டரவேடு, கரியகாடன், நெமிலி, சொராக்காய்பேட்டை, மேலப்பூடி, கீழப்பூடி மற்றும் மேல்திருத்தணி ஆகிய, 10 கிராமங்களில் உள்ள மக்கள் குடும்பமாக வந்து, பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்தும் வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று மேற்கண்ட கிராமவாசிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், நேற்று காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, கோவில் வளாகத்தில் குடும்பங்களுடன் வந்திருந்து, பொங்கல் வைத்து மூலவர் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். முன்னதாக, காலை, 8:00 மணிக்கு மூலவர் தீப்பாஞ்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது.