அழகர்கோவில் : வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சோலைமலை முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அழகர்கோயில் மலை மீது உள்ளது சோலைமலை முருகன் கோயில். நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அழகர்கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அதிகாலையில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். மலை அடிவாரத்தில் உள்ள 18ம் படி கருப்பணசாமி சன்னதியில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு சென்றனர். பட்டர் பாலகணபதி சார்பில் மூலவர் முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பன்னீர், சந்தனம், விபூதி உட்பட பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின் மூலவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு தங்க கவசமும், வைர வேலும் சாத்தப்பட்டது. பகல் ஒரு மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பட்ட முருகப் பெருமான் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை துணை கமிஷனர் கல்யாணி செய்திருந்தார்.