பதிவு செய்த நாள்
19
ஜன
2015
12:01
கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஈஷா யோகா மையத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டங்களில் உலகம் முழுவதிலுமிருந்து 2,500 பேர் கலந்து கொண்டனர். இந்தக் கொண்டாட்டங்களில் பாரம்பரிய முறைப்படி, கிராமத்து வாசனையுடன் மாடுகளையும் விவசாயப் பொருட்களையும் வழிபட்டு பூஜைகளும் விழாவும் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதலாவதாக நடைபெற்ற கோலப்போட்டியில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 500 ஈஷா தியான அன்பர்கள் கலந்து கொண்டனர். தமிழ் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கோலங்களை அவர்கள் வரைந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டு போட்டிகள்: இதைத் தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், பங்கேற்பாளர்கள் 7 குழுவாகப் பிரிக்கப்பட்டனர். மாடுகளை நினைவு கூறும் வகையில், காங்கேயம் காளை, செவலக் காளை, மச்சக் காளை, மருதக் காளை, மயிலக் காளை, ஜல்லிக்கட்டு காளை, கோயில் காளை என்று ஏழாக பிரிக்கப்பட்டு, மாட்டுச் சாணத்தை பயன்படுத்தி "பொங்கல் வாழ்த்து" என்ற வார்த்தையை உருவாக்கினர். நம்மோடு கூடிவாழும் பசுக்களை நினைவுகளை நமக்குள் ஆழமாய் பதிக்கும் முயற்சி இது.
ஈஷாவிலுள்ள மாட்டுத் தொழுவத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, அவைகளின் செயலுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் பொங்கலும் கரும்பும் அவைகளுக்கு படைக்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள்: இதைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆதியோகி ஆலயத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களும், ஈஷா சமஸ்கிருதி மாணவர்களும் தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.
இந்தப் பொங்கலை முன்னிட்டு, 30 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வந்திருந்த அனைவருக்கும் பொங்கல் பதார்த்தங்களை தயாரித்தனர். தமிழக கிராம விழாக்களில் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கூட்டாஞ்சோறு பரிமாறி உண்பர். அதைப் போலவே ஈஷா பொங்கல் நிகழ்ச்சியிலும் கூட்டாஞ்சோறு உண்டனர். 10 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பொங்கல் சமைக்க, 10 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டுக் காய்கறி சேர்த்த கூட்டுக்கறி சமைக்க, 10 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இனிப்புகளைச் சமைத்து அனைவருக்கும் இரவு உணவு பரிமாறினர்.
பொங்கல் என்றால் கொண்டாட்டம், ஆட்டம், பாட்டம் என இருந்த காலம்போய், மக்கள் வீட்டிற்குள் அடைந்தபடி தொலைக்காட்சி பெட்டியே கதியென்று கிடக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. நமது உடலையும் மனதையும் உற்சாகப்படுத்துவதற்காக நம் கலாச்சாரத்தில் வருடத்தின் ஒவ்வொரு நாளுமே ஒரு திருவிழாவாகக் கொண்டாடி வந்திருக்கிறோம். அதில் தமிழர்களின் அடையாளமாகக் கருதப்படும் பொங்கல் திருவிழா மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
நன்றியின் வௌிப்பாடு: பொங்கலைப் பற்றி சத்குரு குறிப்பிடுகையில், "நமக்கும் மண்ணிற்கும் ஆழமான பந்தம் உண்டு, என்று உணர்வுப்பூர்வமாக பார்க்கக்கூடிய தன்மை வரவர குறைந்து கொண்டே இருக்கிறது. அறுவடையைக் கொண்டாடும் இதுபோன்ற பண்டிகைகளை நம் கலாச்சாரத்தில் உருவாக்கியிருப்பது நாம் பூமியுடனானதொடர்பை தொலைத்து விடக்கூடாது என்பதற்குத்தான். இந்தப் பொங்கல் விழா நம் கலாச்சாரத்தில், மிக மிக முக்கியமான ஒரு விழா. அதிலும், நம் உணவை நாம் உருவாக்குகிற ஒரு செயலில், பல விலங்குகளுக்கும் ஆழமான தொடர்பு, ஈடுபாடு இருக்கிறது.
இப்போது, டிராக்டரில் விவசாயம் செய்கிறோம். ஆனால், நம் நிலம், நம் மண் போஷாக்காக இருக்க அதிலே உணவு சக்தியாக வளர, ஆடு மாடுகள் போன்ற கால்நடைகளுக்கு முக்கிய பங்கிருக்கிறது. அதனால், இன்றைய தேதியில் நாம் கொண்டாடும் இந்தப் பொங்கல் விழா நம்மை பற்றியது இல்லை, ஆவினங்களைப் பற்றியது. அவர்கள் இல்லாமல் நாம் வாழ முடியாது,ஆனால் அவர்களோ நாமில்லாமல் சிறப்பாகவே வாழ்வார்கள். அதனால், நமக்கு இத்தனை நன்மைகளை வழங்கும் இந்த கால்நடைகளுக்கு நம் நன்றியின் வெளிப்பாடாக இந்த விழாவை உணர்வுப்பூர்வமாக நன்றியுடன் கொண்டாடுவோம்.
தமிழ் மக்கள் அனைவருக்கும் என் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!" என்றார்.