பதிவு செய்த நாள்
19
ஜன
2015
12:01
திருப்பூர் : உமையாள்புரம் சிவராமன் தலைமையிலான குழுவினரின், "ஆன்மாவின் குரல் என்ற இன்னிசை நாட்டிய நிகழ்ச்சி, திருப்பூரில் நேற்று நடைபெற்றது; இசை அன்பர்கள் பரவசத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்.
ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில், 12ம் ஆண்டு "இசை அமுதம்-2015 நிகழ்ச்சி, வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் ஐந்து நாட்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று, "ஆன்மாவின் குரல் என்ற தலைப்பில், இசையும் நாட்டியமும் இணைந்த பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் தலைமையில், ஸ்ரீகாந்த் - வாய்ப்பாட்டு, விஜயராகவன் - வயலின், அனிருத்தா - நட்டுவங்கம், கார்த்திக் - கடம், திருவனந்தபுரம் ஹரிஹரன் ஆகியோரின் இன்னிசையில், பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
ரோஜா கண்ணன், பிரியா முரளி ஆகியோர், இன்னிசை பாடலுக்கு ஏற்ப, அபாரமாக, அபிநயத்துடன் பரத நாட்டியம் ஆடினர். கடம் கார்த்திக் பாடிய, "முழுமுதற் கடவுளின் மலர் பாதம் பணிந்திட... விநாயகர் துதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. "காமகரிகபரிகஸா என்ற மேற்கத்திய ஜதியில், கர்நாடக இசைப்பாடல் இயற்றி பாடப்பட்டது; பரத நாட்டிய கலைஞர்கள், அப்பாடலுக்கு ஏற்ப அபிநயத்துடன் நாட்டியம் நிகழ்த்தினர்.
தொடர்ந்து, "ஓம் நமசிவாய...ஓம் நமசிவாய... என்று துவங்கிய அலாரிப்பு பாடல் பாடப்பட்டது. அப்பாடலில், சிவனும் பார்வதியும் சுழன்று ஆடி, தாண்டவம் நிகழ்த்துவதுபோல், பரத நாட்டிய கலைஞர்கள் ஆடினர். அடுத்ததாக, "மா மயூரம் மீது ஏறி வா.... என்னை ரக்ஷிக்க வா வா... என்ற பிலஹரி ராகத்தில் அமைந்த முருகன் மீது பாடப்பட்ட கீர்த்தனைக்கு ஆடினர்.முருக பக்தர்கள் வேண்டுதல் நடத்துவது போலவும், மயில் வாகனம் ஏறி முருகப்பெருமான் பறந்து சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போலவும், அப்பாடலுக்கு அபி நயத்துடன் ஆடினர். இன்னிசை ஸ்வரங்களுக்கு தகுந்தபடி, பாடல்களுக்கு, நாட்டிய கலைஞர்கள் அபாரமாக பரதம் ஆடியது, பார்வையாளர்களை பரவசப் படுத்தியது. நேற்று நடந்த "ஆன்மாவின் குரல் ஆடல் நிகழ்ச் சிக்கு, இசை அன்பர்கள் மத்தியில் அபார வரவேற்பு இருந்தது. முன்னதாக, டாக்டர் காயத்திரியின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.