குளித்தலை: குளித்தலை நீலமேகபெருமாள் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை நீலமேகபெருமாள் கோவில் 300 ஆண்டுக்கு மேலான பழமை வாய்ந்த கோவிலாகும். கடந்த 28 ஆண்டுகளாக தேர் பழுதடைந்து இருந்தால், தேரோட்டம் நடக்காமல் இருந்தது. இதையடுத்து, ஆழ்வார் எம்பெருமான் டிரஸ்ட் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதியுதவி பெறப்பட்டு தேர் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேரில் சிற்பங்கள் வரையும் பணி நடந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன் தேர் வெள்ளோட்டம் நடந்தது. வைகாசி விசாக விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடக்கவுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, 28 ஆண்டுக்களுக்கு பின் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆழ்வார் எம்பெருமான் அறக்கட்டளை "டிரஸ்டி டாக்டர் ரகுநாதன், அறக்கட்டளை தலைவர் கோபாலதேசிகன், கோவில் நிர்வாக அலுவலர் அருண்பாண்டியன், நகராட்சி தலைவர் அமுதவேல், கவுன்சிலர் ராதிகா, அன்னை நாமகிரி பள்ளி தாளாளர் கஸ்தூரிரங்கன் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நகராட்சி அலுவலகம், பஜனை மடம், அக்ரஹாரம், அரசு ஆண்கள் பள்ளி மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதியுலா வந்தது.