பதிவு செய்த நாள்
21
ஜன
2015
12:01
ராமேஸ்வரம்: தை அமாவாசை தினமான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடினர். தை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோயிலில் அதிகாலை 2:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க, கால பூஜைகள் நடந்தன. கோயிலில் இருந்து ஸ்ரீராமர், சீதா, லட்சுமணர் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்தக் கடற்கரையில் எழுந்தருளினர். ஸ்ரீராமர், பஞ்சமூர்த்திக்கு தீபாராதனை முடிந்ததும், பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள், அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். முன்னதாக, முன்னோர்கள் நினைவாக ஏராளமானோர் திதி பூஜை செய்தனர்; பின், 22 தீர்த்தங்களிலும் நீராடினர்.பக்தர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் வாகனங்கள் சுற்றுச்சாலையில் அனுப்பப்பட்டதால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. டி.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
விலை உயர்வு: நேற்று, அக்னி தீர்த்த கரையில் திடீரென தோன்றிய கடைகளில் 40 ரூபாய் மதிப்புள்ள பூஜை பொருட்கள் (ஒரு தேங்காய், 2 சிறிய வாழைப்பழம், கதம்பம் பூ) 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பொதுக் கழிப்பறை இன்றி பக்தர்கள் அவதிப்பட்டனர். பஸ் ஸ்டாண்ட், அக்னி தீர்த்தக்கரை, கார் பார்க்கில் உள்ள தனியார் கழிப்பறைகளில் நபருக்கு 20 ரூபாய் வசூலித்தனர்.