ஸ்ரீதேவி கங்கையம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2011 11:06
திருமழிசை : திருமழிசை ஸ்ரீதேவி கங்கையம்மன் கோயிலில், வைகாசித் திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. திருவள்ளூர் அருகே திருமழிசை பேரூராட்சியில், ஸ்ரீதேவி கங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், 81ம் ஆண்டு வைகாசித் திருவிழா ஜூன் 10ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் பந்தக்கால் நடப்பட்டு, 12ம் தேதி ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 14ம் தேதி ஐயங்குளம் குளக்கரையில் இருந்து கங்கை திரட்டி வரப்பட்டு, காலை 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. குடம் வீதியுலா கொண்டு வரப்பட்டு அம்மன் வர்ணிப்பு வைபவம் நடந்தது. பகல் 1 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு குடம் அலங்காரத்துடன், ஸ்ரீதேவி கங்கையம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா வந்தார். திருமழிசை, பிராயம்பத்து, மடவிளாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வைகாசித் திருவிழாவில் கலந்து கொண்டனர். நிறைவு நாள் நிகழ்ச்சியாக, நாளை மறுநாள் கங்கையம்மனுக்கு விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.