பதிவு செய்த நாள்
30
ஜன
2015
12:01
புதுச்சேரி: சிவசுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 108 முளைப்பாரிகள் ஊர்வலம் நேற்று நடந்தது.லாஸ்பேட்டை, பெத்துசெட்டிப்பேட்டையில் அமைந்துள்ள சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில், 3.5 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வரும் 2ம் தேதியன்று, கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு தேதி குறிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகளை துவக்குவதற்கு முன்னோட்டமாக, கணபதி பூஜை நேற்று காலை நடந்தது. இதைதொடர்ந்து, அனைத்து புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ள தீர்த்தங்களும், 108 முளைப்பாரிகளும், விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் உள்ள, வித்யா கணபதி ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. மாட வீதிகள் வழியாக, சிவசுப்ரமணியர் கோவிலுக்கும், யாகசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில், திருப்பணிக் குழு தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மற்றும் அறங்காவலர் குழு நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.