Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » காமாட்சி மவுனகுரு சுவாமிகள்
காமாட்சி மவுனகுரு சுவாமிகள் - திருமலைக்கேணி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜன
2015
03:01

திண்டுக்கல்லுக்கு அருகே திருமலைக்கேணி என்கிற அழகான கிராமத்தில் காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் ஜீன சமாதி அமைந்துள்ளது. தான் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ அன்பர்களை நல்வழிப்படுத்தியும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கியும், பிறவிப் பிணிகளை நீக்கியும் வாழ்ந்த ஒப்பற்ற மகான்-காமாட்சி மவுனகுரு சுவாமிகள். முருகப் பெருமானின் தனிப்பட்ட தரிசனத்தை ஒரு முறையும், ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானையின் இணைந்த தரிசனத்தை ஒரு முறையும் பெற்றவர் இவர் இன்றைக்கும் தன் சன்னிதி தேடி வரும் எந்த ஒரு பக்தரின் பிரார்த்தனையையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறார் இந்த சித்த புருஷர்.

காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் சிஷ்யரான குழந்தைசாமியின் சமாதியும் குழந்தைசாமியின் சிஷ்யரான சச்சிதானந்த சுவாமிகளின் சமாதியும் காமாட்சி மவுனகுரு சுவாமிகள் ஜீவ சமாதியை ஒட்டியே அமைந்துள்ளன. காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் குருபூஜை ஆடி பூராடத்தன்றும், குழந்தைசாமியின் குருபூஜை ஆவணி பூசத்தன்றும். சச்சிதானந்த சுவாமிகளின் குருபூஜை புரட்டாசி அசுவினி அன்றும் பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த தினங்களில் விசேஷ அபிஷேகங்களும் அலங்காரங்களும் அன்னதானமும் நடைபெறும். திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றி உள்ள பல பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கூடி குருமார்களின் அருள் பெறுவது வழக்கம்.

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருமலைக்கேணி, நத்தத்தில் இருந்து மணக்காட்டூர் வழியாக திருமலைக்கேணி வந்தால் 24 கி.மீ.! திண்டுக்கல்லில் இருந்து செங்குறிச்சி செல்லும் நகரப் பேருந்துகளும் செந்துறைக்குச் செல்லும் புறநகர் பேருந்துகளும் திருமலைக்கேணி வழியாகச் செல்லும். காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அருகே சுவாமிகளுக்கு தரிசனம் தந்த-ஸ்ரீமுருகப் பெருமான் திருக்கோயில், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. முருகப் பெருமானே காமாட்சி மவுனகுரு சுவாமிகளைக் கூப்பிட்டு வந்து, இங்கே உட்கார் என்று இந்தச் சிறு மலையை அடையாளம் காட்டியதாக அவரது பக்தர்கள் சொல்கின்றனர். சுவாமிகளுக்கு முருகப் பெருமான் காட்சி கொடுத்த இடமும் ஸ்ரீவள்ளி மற்றும் ஸ்ரீ தெய்வானையின் தரிசனம் பெற்ற வள்ளி சுனையும் அருகிலேயே உள்ளன.

இனி, காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் சரிதத்தைப் பார்ப்போம்? திண்டுக்கல் மாவட்டத்தில் செங்குறிச்சி கிராமத்துக்கு அருகே உள்ளது வல்லம்பட்டி என்கிற குக்கிராமம். விவசாயத்தையே பிரதானமாகக்கொண்டு வல்லம்பட்டியில் வாழ்ந்து வந்தவர்கள் குப்புசாமி- குப்பாயி அம்மாள் தம்பதியர். இறை அருளாலும். மகான்கள் ஆசியாலும் இந்த தம்பதிக்கு கி.பி. 1875-ஆம் ஆண்டு முதல் குழந்தையாக நம் சுவாமிகள் அவதரித்தார். பெற்றோரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஆட்பட்டு, சுவாமிகள் வளர்ந்து வந்தார். தந்தையின் விவசாயப் பணிகளுக்கும் தாயின் விட்டு வேலைகளுக்கும் உதவியாக இருந்து வந்தார் சுவாமிகள். அந்தக் கால வழக்கப்படி இளம் பிராயத்திலேயே சுவாமிகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். செம்பாயி அம்மாள் என்பவரைக் கரம் பிடித்தார் சுவாமிகள். ஒரு சில வருடங்கள் கழிந்த பின்னர் செம்பாயி அம்மாளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. தாத்தாவின் பெயரை நினைவுபடுத்தும் விதமாக குப்புசாமி என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்தனர்.

இளம் வயதில் இருந்தே முருக பக்தியில் திளைத்திருப்பது காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் வழக்கம். எத்தனை காலத்துக்குத்தான் தன் பக்தனைத் தள்ளி வைத்துக்கொண்டே பார்ப்பார் முருகப் பெருமான்? சுவாமிகளைத் தன் பக்கம் இழுக்கவேண்டிய வேளை வந்ததும். சுவாமிகளின் மனதில் புகுந்தார் முருகப் பெருமான் பிறகென்ன... உணவு சுவைக்கவில்லை; ஆடை பாரமானது இல்லறம் இனிமை இழந்தது. மனைவியையும் மகனையும் மனம் மறந்தது; தான் தேடவேண்டிய சுகம் இல்லறம் அல்ல என்பதை சுவாமிகள் உணர்ந்துகொண்டார். 1905-ஆம் வருடம் (தமிழ் வருடம்; விசுவாச) கார்த்திகை மாதம் 12-ஆம் தேதி சுவாமிகள் துறவு பூண்டார் என்று அவரது சரிதம் சொல்கிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை முறையே மாறியது. சித்து விளையாடல்களும் அருளாடல்களும் நிகழ்த்தி பக்தர்களுக்கு ஆன்மிக போதனைகளை வழங்கினார். மலைப் பகுதிகளில் ஆங்காங்கே நேரம் போவது தெரியாமல் அமர்ந்து கடும் தியானம் மேற்கொண்டார். முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களில் முழு நேரத்தைச் செலவழித்தார். எங்கெங்கோ சுற்றித் திரிந்த சுவாமிகளை-அவரது முப்பது வயதில்- என் கோயிலுக்கு வா என்று முருகப் பெருமான் அழைத்தார். அந்த கோயில்தான்-சுவாமிகளின் சமாதி அருகே இருக்கும் ஸ்ரீமுருகப் பெருமான் திருக்கோயில். அழகான கோயில்.

காமாட்சி மவுனகுரு சுவாமிகளிடம் வருவோம்... சுவாமிகளின் சித்து விளையாட்டுகள் வெளியே தெரிய வேண்டிய வேளை வந்தது. வல்லம்பட்டிக்குத் தென்கிழக்கே கரந்தமலை என்னும் இடத்தில் ஐயனார் கோயில் ஒன்று இருந்தது. சுமார் ஆறு மாதங்கள் அங்கேயே தங்கி யோகப் பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு. செங்குறிச்சியின் சேரிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றார். எவரது அனுமதியையும் எதிர்பார்க்காமல் ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார் சுவாமிகள். குடிசை வீட்டுக்குள் இருந்தவர்கள் அதிர்ந்தனர். காரணம் - சுவாமிகளையும் அவரது குடும்பத்தினரையும் நன்றாக அறிந்தவர்கள் அவர்கள். சோழிய செட்டியார் இனத்தைச் சேர்ந்த தாங்கள் எங்கள் வீடுகளுக்கு வரக் கூடாது என்று அன்புடன் சொன்னார்கள். இல்லறச் சட்டையையே துறந்தவருக்கு சாதியச் சட்டையா சங்கடம் ஏற்படுத்தும்? சிரித்தார். பிறகு, அந்த வீட்டிலேயே அமர்ந்தார். குடும்பத்தினர் நெளிந்தார்கள். தவத்திலும் யோகத்திலும் திளைக்கும் சுவாமிகள் ஒருவர் தங்கள் வீட்டுக்கு வந்திருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும். உள்ளூர பயந்தார்கள். அப்போது, எனக்குப் பசிக்கிறது. சாப்பாடு கொடுங்கள் என்றார் சுவாமிகள்.

ஐயா.... உங்களுக்கு நாங்கள் சாப்பாடு தரக் கூடாது. மாமிசத்தை உண்பவர்கள் நாங்கள் என்று நாசூக்காக மறுத்தனர். கேட்கும் சுபாவமா சுவாமிகளுக்கு? சாப்பாடு வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகே சென்றார். தரையை சுத்தும் செய்து ஒரு இலையை விரித்தார். பாத்திரத்தில் இருந்து சிறிது சாதத்தை இலையில் போட்டார். மாமிசத் துண்டுகள் கலந்த குழம்பை அதில் கலந்தார். நிம்மதியாக ரசித்துச் சாப்பிட்டார். குடும்பத்தினர் அனைவரும் விதிர்விதிர்த்து நின்றிருந்தபோது, என்ன, பாக்கிறீங்க... எப்படி நான் இதை எல்லாம் சாப்பிடறேன்னு கவலையா? நான் என்ன சாப்பிட்டேன்னு காட்டறேன். என் அருகே வாங்க என்று சொன்னதும். அந்தக் குடும்பத்தில் இருந்தவர்கள் சுவாமிகளின் அருகே பயப்பக்தியுடன் வந்து அமர்ந்தனர். அப்போது சுவாமிகள் தன் வாயைத் திறந்து காட்டவும். உள்ளே - உணவு அனைத்தும் மல்லிகை மலர்களாகக் காட்சி கொடுத்தன. பிரமித்துப் போன அந்தக் குடும்பத்தினர். சுவாமிகளின் கால்களில் விழ. அவர்களை ஆசிர்வதித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். சுவாமிகள். காடு மலை என்று சுற்றித் திரிந்தார். ஒரு நாள் முருகப்பெருமானே சுவாமிகள் எதிரில் தோன்றி, திருமலைக்கேணியில் உள்ள கோயிலின் அடையாளங்களைச் சொல்லி, நீ அங்கே போய் உட்கார். உன்னால் அங்கே ஆகவேண்டிய பணிகள் உள்ளது என்று சொல்லி மறைந்தார். முருகப் பெருமானின் உத்தரவுகிணங்க, நேராக திருமலைக்கேணி ஸ்ரீமுருகன் கோயிலுக்கு வந்தார். இவர் வந்த வேளையில் அந்த கோயில் கவனிப்பார் இல்லாமல் - முறையான வழிபாடுகள் இல்லாமல் பாழ்பட்டு இருந்தது. இதைக் கண்டு வருந்தினார். சுவாமிகள் முருகப் பெருமானை தியானித்து விட்டு, கோயில் வடபுறம் அமைந்துள்ள ஒரு சிறு கல்பாறையில் புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்து தியானத்தை மேற்கொண்டார். இந்தக் கல்பாறை இன்றும் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.

இப்படி தியானம் மேற்கொண்டு வந்த காலத்தில் வள்ளி, தெய்வானை ஆகிய இருவரையும் இங்கு தரிசிக்கும் பேறு பெற்றார் சுவாமிகள். ஒரு நாள் வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய இருவரும் சாதாரண பெண்கள் வடிவில் சுவாமிகளுக்கு எதிரே தோன்றினர். இவருக்கு முன்பாக நின்று, சுவாமீ..... நாங்கள் தினைமாவு சாப்பிட்டு வந்தோம். இப்போது தாகம் நாக்கை வறட்டுகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்று ஒருமித்த குரலில் கேட்டனர். நிமிர்ந்து பார்த்த சுவாமிகள், அதோ, ஸ்ரீசுப்பிரமண்ய் கோயிலுக்குத் தென்புறம் தீர்த்தம் அமைந்துள்ளது. அங்கே போய் அருந்துங்கள் என்றார். அதற்கு அவர்கள், அங்கே தீர்த்தம் இருப்பது எங்களுக்கு தெரியும். தங்களது திருக்கரங்களால் தீர்த்தம் கொடுங்கள் என்று கெஞ்சலாகக் கேட்க... தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து, தனக்குப் பக்கத்தில் - தரையில் ஓரிடத்தில் கைகளால் பள்ளம் பறித்தார். என்னே ஆச்சிரியம்.... பீறிட்டு வந்தது பளிங்கு போன்ற நீர்! பிறகு, அந்த நீரை சுவாமிகள் இருவருக்கும் கொடுக்க, அதை அருந்தியவர்கள் அடுத்த கணமே அங்கிருந்து மாயமானார்கள். இந்தத் தீர்த்தத்தை இன்றும் நாம் தரிசிக்கலாம். பக்தர்களை இந்தத் திருமலைக்கேணி கோயிலுக்கு வரவழைக்க வேண்டும் என்பதற்காக 1914-ஆம் வருடம் தைப்பூச தினத்தில் திண்டுக்கல் குப்புசாமி ஐயங்கார் குடும்பத்தாரைக் கொண்டு திருமலைக்கேணி முருகப் பெருமான் கோயில் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார் சுவாமிகள். இதன் பிறகு, இந்தக் கோயில் பற்றி வெளி உலகத்துக்கு மெள்ளத் தெரிய ஆரம்பித்தது.

தன் கணவர் (ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சுவாமிகள்) வீட்டை விட்டு வெளியேறிப் பல காலம் ஆன பிறகு, அவர் திருமலைக்கேணி முருகப் பெருமான் கோயில் இருப்பதைக் கேள்விப்பட்ட செம்பாயி அம்மாள். அவரைச் சந்தித்துப் பேசி வீட்டுக்கு அழைத்து வந்துவிடலாம் என்று எண்ணி, தனக்கு வேண்டப்பட்ட நான்கு பெண்களுடன் ஒரு முறை திருமலைக்கேணி வந்தார். கோயில் வாசல் படிக்கட்டில் தன் கணவர் அமர்ந்திருப்பதைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினார் செம்பாயி அம்மாள். எப்படியாவது வீட்டுக்கு வந்து விடுங்கள் என்று அவர் மனைவியும் உடன் வந்த பெண்களும் சுவாமிகளிடம் வேண்ட... அடுத்த கணம் சுவாமிகள் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து நின்றிருந்தது. சுவாமிகளை அங்கே காணவில்லை. அதன் பிறகுதான், தன் கணவரின் தவ வலிமையையும் அவரது நிலைப்பாட்டையும் உணர்ந்த செம்பாயி அம்மாள். நல்ல பாம்பை வணங்கிவிட்டு, முருகப் பெருமானையும் தரிசித்துவிட்ட, உடன் வந்த பெண்களுடன் அங்கிருந்து புறப்பட்டார். ஒரு முறை சுவாமிகளின் பக்தர்கள் சிலர் காசிக்குச் சென்று ஸ்ரீவிஸ்வநாதரைத் தரிசிக்க விருப்பம் கொண்டார்கள். தங்களது இந்த யாத்திரையில் சுவாமிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று அவரிடம் விண்ணப்பித்தார்கள். இருந்த இடத்தில் இருந்தபடியே காசியைக் காட்ட வல்லவர் இந்த சுவாமிகள் என்பதை அந்த பக்தர்கள் அறிந்திருக்கவில்லை. அடேய்... காசிக்குப் போய்த்தான் விஸ்வநாதரை தரிசிக்க வேண்டுமா?  மெனக்கெட வேண்டாம். வயல் வேலைகளை விட்டு விட்டு அங்கே ஏன் செல்கிறீர்கள்? காசி தரிசனத்தை உங்களுக்கு இங்கேயே காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டுத் தன் வலது உள்ளங்கையை அவர்களுக்கு முன் நீட்டினார். பிறகு, காசியை நன்றாக தரிசியுங்கள் என்று அவர்களிடம் சொன்னார்.

சுவாமிகளின் வலது உள்ளங்கையப் பார்த்த அந்த பக்தர்கள் பிரமித்துப் போனார்கள். வீடியோ காட்சி மாதிரி சுவாமிகள் உள்ளங்கையில் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் கங்கையும் ஏராளமான பக்தர்கள் அங்கே புனித நீராடுவதையும் ஸ்ரீகாசி விஸ்வநாதருக்கு ஆரத்தி நடப்பதையும் ஸ்ரீவிசாலாட்சி அன்னைக்கு தீபாராதனை காண்பிக்கும் காட்சியையும், ஜொலிக்கும் அன்னபூரணி கோயில் மாறி மாறி தரிசித்து நெக்குருகிப் போனார்கள் அந்த பக்தர்கள். சாமீ.... உங்களோட தவ வலிமை தெரியாமல். எங்களில் நீங்களும் ஒருத்தரா நினைச்சு காசிக்குக் கூப்பிட்டுவிட்டோம். எங்களை மன்னிச்சிடுங்க சாமீ என்று அவரது கால்களில் விழுந்தனர். அனைவரையும் ஆசிர்வதித்துப் பிரசாதம் கொடுத்து அனுப்பினார் சுவாமிகள்.

ஒவ்வொரு வருடமும் திருமலைக்கேணியில் தைப்பூச விழா நடக்கும் முன்னதாக சுவாமிகளே அக்கம்பக்கத்து ஊர்களுக்குச் சென்று பலரையும் கோயிலுக்கு வருமாறு அழைப்பது வழக்கம். அப்படி ஒரு  தைப்பூச விழா பற்றித் தன் பக்தர்களுக்குத் தகவல் சொல்வதற்காகத் திண்டுக்கல் சென்றிருந்தார். சுவாமிகள் அப்போது சுவாமிகளைச் சந்தித்த இரண்டு பக்தர்கள். அன்றைய மதிய உணவுக்குத் தங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். சுவாமிகள் குழம்பினார். யாராவது ஒருவர் வீட்டில்தானே உண்ண முடியும்? அதுவும் மதிய வேளை உணவுக்கு இப்படி இரண்டு பேரும் கூப்பிடுகிறீர்களே.... இருவரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்களேன் என்று அவர்களிடமே கேட்டார். ஆனால், அந்த இருவருமே விட்டுக் கொடுப்பதாக இல்லை. தங்கள் விட்டு மதிய உணவுக்கு சுவாமிகள் அவசியம் வர வேண்டும் என்று அன்புத் தொல்லை கொடுத்தனர். சரி.... ரெண்டு பேர் வீட்டிலும் உணவு தயார் செய்யுங்கள். பார்க்கலாம் யார் வீட்டுக்கு வர முடிகிறதோ. வருகிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். என் வீட்டில் சுவாமிகளுக்குப் பிரதமாதமான விருந்து வைத்து அசந்துப் போகிறேன். பார் என்று ஒருவர் மற்றவரிடம் சொல்லி விட்டு, இரண்டு அனபர்களுமே விருந்து தயார் செய்யப் புறப்பட்டனர். சுவாமிகள் எப்படியும் நம் வீட்டுக்குத்தான் வருவார். அவன் வீட்டுக்குப் போக மாட்டார் என்று இருவருமே எண்ணினார்கள். ஆனால் சுவாமிகளின் சித்து வேலைகள் அவர்களுக்குத் தெரியுமா, என்ன?

மதிய வேளை, இருவரது வீட்டிலும் ஒரே நேரத்தில் நுழைந்தார் சுவாமிகள். யப்பா.... நல்லவேளை .... சுவாமிகள் நம் வீட்டுக்கு வந்துவிட்டார் என்று இருவரும் தனித் தனியே தங்கள் வீடுகளில் சந்தோஷப்பட்டனர். சுவாமிகளுக்குப் பாத பூஜை செய்து. ஆசனத்தில் அமர வைத்து. தலைவாழை இலை போட்டு விருந்து படைத்தனர். திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு. குடும்பத்தினரை ஆசிர்வதித்துவிட்டு, திருமலைக்கேணிக்குப் புறப்பட்டு போனார் சுவாமிகள். அன்று மாலை அந்த இரு நண்பர்களும் கடைத் தெருவில் சந்தித்தனர். என்னப்பா.... உன் வீட்டுக்கு சுவாமிகள் வராமல் ஏமாற்றி இருப்பாரே... என் வீட்டில் அவருக்கு இன்று தடபுடல் விருந்து வைத்து அமர்க்களப்படுத்திவிட்டேன் என்றார் முதல் அன்பர். இதைக் கேட்ட  இரண்டாவது அன்பர் கேலியாகச் சிரித்து. ஏம்ப்பா... என் வீட்டுக்குத்தாம்ப்பா வந்தார். பாத பூஜை செய்து, நானே என் கையால் அவருக்கு உணவு பரிமாறினேன் என்று சொல்ல.... ஒரு கட்டத்தில் இருவரும் குழம்பினர். பிறகுதான், அவர்களுக்கு சுவாமிகளின் சித்து விளையாடல் புரிந்தது. 1917-ஆம் ஆண்டு பிங்கள வருடம் ஆடி மாதம் 17-ஆம் தேதி செவ்வாய்கிழமை இரவு 11 மணி அளவில் தன்னுடைய தவ பலத்தால். ஜீவ சமாதி நிலையை அடைந்தார் ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சுவாமிகள். எனக்கு என்றும் இயல்பு இல்லை. என்றைக்கும் நான் இங்கேயே வீற்றிருந்து என்னைத் தேடி வரும் பக்தர்களைக் காத்து அருள் புரிவேன் என்று ஜீவ சமாதி ஆவதற்கு முன் சுவாமிகள் சொன்னதாக அவரது பக்தர்கள் தெரிவித்தார்கள். இதனால்தானோ என்னவோ... என் மனைவி, அவளுடைய ஆயுள் முழுதும் திருமாங்கல்யம் அணிந்திருக்க வேண்டும். என்று தான் சமாதி ஆகும்போது சொல்லி இருந்தார்.

எனவே சுவாமிகள் இன்றைக்கும் சூட்சும உருவில் இங்கு இருந்து வருவதாக அவரது பக்தர்கள் திடமான நம்பிக்கையில் வந்து தரிசிக்கிறார்கள். சுவாமிகள் பயன்படுத்திய தண்டம், திருவடி, உபயோகப்படுத்திய ஓலைப் பெட்டிகள் போன்றவற்றை இங்கே தரிசிக்கலாம். நவக்கிரகம் விநாயகர் சன்னிதிகளும் உண்டு. திருமலைக்கேணி திருப்பணிகளுக்கு வாரியார் சுவாமிகள் ஒரு முறை விஜயம் செய்திருக்கிறார். தற்போது இந்த திருமலைக்கேணி மடத்தை நிர்வகித்து வருபவர் சச்சிதானந்த சுவாமிகளின் சிஷ்யரான முத்துகோபாலகிருஷ்ண சுவாமிகள் என்பவர். என்றாலும், மடத்தின் பெரும்பாலான பொறுப்புகளை அங்கேயே இருந்து கவனித்து வருபவர்-கா.கு. பிச்சை என்கிற முருகேசன் என்பவர். இவர் காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் பேரன். காமாட்சிமவுனகுரு சுவாமிகளின் மகனான குப்புசாமியின் மகன்தான் முருகேசன். குருபூஜை தினங்கள் தவிர, ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி தினத்தன்றும் அன்னதானத்துடன் அபிஷேக-அலங்காரங்கள் நடைபெறுகின்றன. முருகனருள் பெற்ற காமாட்சி மவுனகுரு சுவாமிகளை திருமலைக்கேணியில் தரிசித்து குருவருள் பெறுவோம்!

தகவல் பலகை

தலம்    : திருமலைக்கேணி.

சிறப்பு    : காமாட்சி மவுனகுரு சுவாமிகள் ஜீவ சமாதி.

எங்கே இருக்கிறது: திண்டுக்கல்லில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருமலைக்கேணி. நத்தத்தில் இருந்து மணக்காட்டூர் வழியாக திருமலைக்கேணி வந்தால் 24 கி.மீ. 1 திண்டுக்கல்லில் இருந்து செந்துறைக்குச்  செல்லும் புறநகர் பேருந்துகள் திருமலைக்கேணி வழியாகச் செல்லும்.

செந்துறையில் இருந்து திருமலைக்கேணி வழியாகப் பழநி செல்லும் தடமும் உண்டு. செந்துறையில் இருந்து திருமலைக்கேணிக்கு சுமார் 15 கி.மீ. தொலைவு. செங்குறிச்சியில் இருந்து திருமலைக்கேணிக்கு 2 கி.மீ. தொலைவு.

எப்படிப் போவது? திண்டுக்கல்லில் இருந்து செங்குறிச்சி செல்லும் நகரப் பேருந்து தடம் எண்: 2ஏ, 2பி ஆகியவை திருமலைக்கேணி வழியாகச் செல்லும். செந்துறையில் இருந்து திருமலைக்கேணிக்கு பேருந்து வசதி உண்டு. திண்டுக்கல்லில் இருந்து திருமலைக்கேணி வழியாக துவரங்குறிச்சி செல்லும் பேருந்துகளும் உண்டு.

தொடர்புக்கு:
திருமலைக்கேணி ஜீவசமாதி மடம்,
செங்குறிச்சி அஞ்சல், சிலுவத்தூர் வழி,
திண்டுக்கல் மாவட்டம் - 624 306.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar