மதுரை : மதுரையில் பல்வேறு இடங்களில் தைப்பூச திருவிழா நடந்தது.
அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் முதல் முறையாக கொடியேற்றத்துடன் துவங்கப்பட்ட தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. பிப்.2ல் காலை உற்சவர்களுக்கு அபிஷேகம் முடிந்து வள்ளி, தெய்வானையுடன் பல்லக்கில் புறப்பட்ட முருகப் பெருமான் தங்கத்தேரில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனைகள் முடிந்து 10.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. மாலையில் 1008 விளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். உற்சவருக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
வாடிப்பட்டி: வயித்துமலை அடிவாரம் கொண்டையம்பட்டி ஓம் சிவ சுப்ரமணியர் கோயிலில் அன்னதானம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான பழனி ஆண்டவர் கோயிலில் மூலவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம் உட்பட பல்வகையாக அபிஷேகங்கள் முடிந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.முன்னதாக மூலவருக்கு பல்வகை திரவிய அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துகுமார சுவாமி, தெய்வானை தனித்தனியாக புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர். இரண்டு உற்சவர்கள் ஒரே நாளில் புறப்பாடாவது ஆண்டிற்கு ஒருமுறை, தைப்பூசத்தன்று மட்டுமே. நேற்று காலை முதல் பக்தர்கள் பால் குடம், பல்வகை காவடி எடுத்து வந்தனர்.
மேலுார்: மேலுார் செம்மினிப்பட்டி ஆண்டிபாலகர் கோயில் விழாவில் பல்வேறு கிராமத்தினர் பங்கேற்று பல்வகை நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இக்கோயிலில் முருகனின் வேல் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.அலங்காநல்லுார்கொண்டையம்பட்டி வகுத்துமலையில் சிவசுப்பிரமணியர் கோயிலுக்கு பக்தர்கள் பல்வகை காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், ஹரிபகவான் ஆசிரம நிர்வாகிகள் செய்திருந்தனர்.