பதிவு செய்த நாள்
04
பிப்
2015
02:02
சேலம்,:தை பூசத்தை ஒட்டி நேற்று, நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தேரோட்டத்தில், "அரோகரா கோஷம் விண்ணை முட்ட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாமக்கல், காளிப்பட்டி கந்தசாமி கோவிலின் தை பூசத் திருவிழா, ஜன.,30ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், தினம் தோறும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா ஆகியன நடத்தப்பட்டது.தைப் பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாவ தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று காலையில் சிறப்பு பூஜையுடன் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. மாலையில், விநாயகர், கந்த ஸ்வாமி ஸமேத வள்ளி, தெய்வானை திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, விநாயகர் முதலில் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல துணை கமிஷனர் மங்கையர்க்கரசி, உதவி கமிஷனர் கிருஷ்ணன், கோவில் பரம்பரை பூஜாரி அம்பிகாதேவி, செயல் அலுவலர் முத்துசாமி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
பக்தர்களின் "அரோகரா கோஷம் விண்ணை முட்ட, கோவிலை சுற்றி தேர் இழுத்து வரப்பட்டு, பின்னர் நிலை நிறுத்தப்பட்டது.தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், தங்களின் விவசாய நிலங்களில் விளைந்த காய்கறி, தேங்காய் உள்ளிட்டவற்றை கோவிலில் காணிக்கையாக செலுத்தினர். அது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவில் வளாகத்தில் பஞ்சாமிர்தம் தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கினர்.
பக்தர்களின் வசதிக்காக, நாமக்கல், சேலம், ஈரோடு, இடைப்பாடி, சங்ககிரி, ஆட்டையாம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து, காளிப்பட்டிக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.தேரோட்டத்தை தொடர்ந்து, இன்று சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரம், முத்துப்பல்லக்கில் ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. நாளை புஷ்ப பல்லக்கில் ஸ்வாமி திருவீதி உலாவும், அதிகாலையில் சத்தாபரணம் ஆகியன நடக்கிறது. ஃபிப்.6ல் வசந்த விழா நடக்கிறது.திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், திருவிழா கமிட்டியினர் செய்து உள்ளனர்.