பதிவு செய்த நாள்
04
பிப்
2015
02:02
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, முருகன் கோவில்களில் தைப்பூசத் தேர்திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.மோகனூரில், பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் உள்ளது. இந்தாண்டு தைப்பூச விழா கடந்த, 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27 முதல், ஃபிப்ரவரி, 2ம் தேதி வரை தினமும் காலை அபிஷேகமும், இரவு அன்னம், பூதம், ஆட்டுக்கிடா, யானை, மயில், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று, காலை, 10.40 மணிக்கு ஸ்வாமி திருத்தேரில் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. ஸ்வாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்வாமியை வழிபட்டனர்.மாலை, 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, ஸ்வாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அதை தொடர்ந்து இரவு, 8 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. தைப்பூசத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, காந்தமலை வாணவேடிக்கை அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சேந்தமங்கலம் அடுத்த, தத்தகிரி முருகன் கோவிலில் நடந்த விழாவில், காலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஸ்வாமியை வழிப்பட்டனர்.
ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன் ஸ்வாமிக்கு அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. கைலாசநாதர் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு சென்ற பக்தர்கள் கோவிலை அடைந்தனர். அங்கு ஸ்வாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் பாலசுப்ரமணியர், தண்டாயுதபாணி ஸ்வாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடந்தது. ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ராசிபுரம் வள்ளலார் சுத்த சன் மார்க்க சங்கத்தின் சார்பில், வள்ளலார் கோவிலில் தைப்பூசம் விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை, 9.45 மணிக்கு, ஜோதி ஏற்றப்பட்டது. பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ப.வேலூர் அடுத்த, கபிலர்மலை பாலசுப்ரமணியர் ஸ்வாமி கோவிலில் நடந்த விழாவில், நேற்று அதிகாலை, 5 மணிக்கு ஸ்வாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். மாலை, 4.40 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தொடர்ந்து பல்லக்கு உற்சவம், நடராஜர் தரிசனம், ஸ்வாமி மலைக்கு எழுந்தருளல், சத்தாபரணமும் நடந்தது.
கோவில் செயல் அலுவலர் சாந்தி, தக்கார் முத்துசாமி, விழாக்குழு தலைவர் வடிவேல், கபிலக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கலாராணி, முக்கிய நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.
குமாரபாளையம், வட்டமலை முருகன் கோவிலில் நடந்த விழாவில், ஸ்வாமி, வெள்ளிக்கவசத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், காவடி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.