பதினேழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய மகான்களில் குமரகுருபரர் மிகப் புகழ்பெற்றவர். இளம்வயதில் ஊமையாயிருந்து திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறமை பெற்றவர். தன் குருநாதர் ஞானதேசிகரின் கட்டளைப்படி, வடநாடு சென்று சைவசமயத்திற்கு தொண்டாற்றினார். காசி விஸ்வநாதர் மீது காசிக்கலம்பகம் பாடினார். பின்னர் சரஸ்வதி பற்றி சகலகலாவல்லிமாலை என்னும் பாடல் தொகுப்பை இயற்றினார். இந்தியை யாருடைய துணையுமின்றி கற்றார். வடநாட்டு முகமதிய மன்னரைக் காண சென்ற போது குமரகுருபரருக்கு ஆசனம் கொடுக்க மறுத்தான். காளிதேவியருளால் சிங்கம் ஒன்றின் மீதேறி அரசசபைக்கு சென்றார். இதுகண்டு ஆச்சரியப்பட்ட மன்னர் குமரகுருபரருக்கு பல பரிசுகளை வழங்கினார். அவரது உதவியுடன் காசியில் மடம் அமைத்து சிவாலயமும் கட்டினர். அவற்றின் வளர்ச்சிக்கு நிவந்தங்களும் (உபயம்) பெற்றார். இவர் நிறுவிய மடங்களுள் குமாரசுவாமி மடமும், கோயில்களுள் கேதாரேஸ்வரர் கோயிலும் காசியில் குறிப்பிடத்தக்கவையாகும்.