பதிவு செய்த நாள்
13
பிப்
2015
12:02
கும்பகோணம்: மகாமகத்தையொட்டி, கும்பகோணம் சரநாராயண பெருமாள் கோயில், அமிர்தகலசநாதர் கோவில் மற்றும் 16 மண்டங்களில், 67 லட்சம் ரூபாயில், திருப்பணிக்கான பாலாலயம் நேற்று முன்தினம் நடந்தது.
கும்பகோணம் பெரிய தெருவில், சுமார், 810 ஆண்டுகள் பழமையான, நாயக்கர் மன்னர் காலத்தில், தசாவதார மூர்த்திக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது. இந்த கோயிலை வரும் மகாமகத்தை முன்னிட்டு, திருப்பணிகள் செய்ய நேற்று முன்னதினம் பாலாலயம் நடைபெற்றது.கோயிலின் மதில்சுவர், கோபுரங்கள், சன்னதிகள் அனைத்தும், 26 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளது. இதற்கான சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.கும்பகோணம் சாக்கோட்டையில் உள்ள, மகாமகத் திருவிழா தொடர்புடைய அமிர்தகலசநாதர் கோயிலில், 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்வதற்கான பாலாலயம் நடைபெற்றது.
தவிர, மகாமக குளத்தை சுற்றிலும், 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில், 16 மண்டபங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு மண்டபத்திலும், பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தானேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர்,
பக்திகேஸ்வரர், பைரேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்ளேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என மொத்தம், 16 வகையான சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.இவற்றை ஒருங்கிணைத்து, சோடசமகாலிங்க சுவாமிகள்
என அழைப்பது வழக்கம். வரும் 2016 மகாமகத்தினையொட்டி, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. நேற்று முன்தினம், காசிவிஸ்வநாதர் கோவில் வளாகத்தில், 16 மண்டங்களுக்கான பாலாலயம் நடந்தது.