பதிவு செய்த நாள்
19
பிப்
2015
12:02
திருப்பதி: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, தன் மனைவியுடன், திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். நேற்று அதிகாலை, தன் மனைவியுடன் வந்த சிறிசேன, வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாக, தரிசனத்திற்கு சென்றார். சுப்ரபாத சேவையில், ஏழுமலையானை இருவரும் தரிசித்தனர். அதன்பின், திருமலையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த இலங்கை அதிபர், காலை 9:00 மணிக்கு, ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து, கொழும்பு புறப்பட்டு சென்றார். தங்க வாசல் பூட்டு உடைப்பு: திருமலை ஏழுமலையான் கோவிலில் உள்ள, தங்க வாசல் கதவின் பூட்டை, நேற்று அதிகாரிகள் உடைத்தனர். தினசரி நள்ளிரவு, ஏகாந்த சேவை முடிந்த பின், அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டு, சாவிகள் பாதுகாப்பாக, அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். மறுநாள் அதிகாலை, சுப்ரபாத சேவைக்காக, ஏழுமலையான் கோவில் நடை திறக்கப்படும். இந்நிலையில், இலங்கை அதிபரின் வருகைக்கு முன், தங்க வாசல் கதவை, வழக்கம்போல் அதிகாரிகள் திறக்க முயன்றனர். ஆனால் சாவி, பூட்டில் சிக்கிக் கொண்டதால், அதிகாரிகளால் கதவை திறக்க முடியவில்லை. அப்போது, இலங்கை அதிபர், தரிசனத்திற்காக கோவிலுக்குள் நுழைந்ததால், அதிகாரிகள் பூட்டை உடைத்தனர். இதன் காரணமாக, தங்க வாசல் அருகில், 2 நிமிடங்கள், இலங்கை அதிபர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், கோபமடைந்த தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ், தரிசனம் தாமதமானதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என, கோவில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தாமதம் இல்லை: இதுகுறித்து, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு கூறியதாவது: வழக்கமாக, 3:00 மணிக்கு நடக்கும், சுப்ரபாத சேவைக்காக, கோவில் முன் வாசல் முதல் கருவறை வரை, 7 கதவுகளை, ஒவ்வொன்றாக திறக்க வேண்டும். எனவே, அதிகாலை, 2:30 மணிக்கே கதவுகள் திறப்பது தொடங்கப்படும். இந்நிலையில், இலங்கை அதிபர் வந்தபோது, தங்க வாசல் பூட்டு பழுதானதால், அதை உடைக்க, சிறிது நேரம் பிடித்தது. காலை, 3:00 மணிக்கு, சுப்ரபாத சேவை துவங்கப்பட்டது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.